அபுதாபியில் காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வசதி

 


அபுதாபி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணியானது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி போடும் மையமானது, மக்கள் சிரமமின்றி வந்து போட்டுக்கொள்வதற்கு வசதியாக பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது.


இதன் ஒருபகுதியாக பொதுமக்கள் காரில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் புதிய வசதி சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. இதற்காக அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள மையமானது காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தினமும் 700 பேர் வரை தடுப்பூசி போடக்கூடிய வகையில் இந்த மையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது காரில் இருந்தவாறே தினமும் சராசரியாக 600 பேர் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இங்கு தடுப்பூசி போட வருபவர்களின் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, 20 நிமிடத்தில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த மையத்துக்கு காரில் வரும் பொதுமக்களிடம் முதலில் அமீரக அடையாள அட்டையை, மையத்தின் பாதுகாவலர் சரி பார்ப்பார். பின்னர் அவர்களை மையத்துக்குள் செல்ல அனுமதிப்பார். அதன் பின் மருத்துவ ஊழியர்கள் ஆவணங்களை சரிபார்த்து, பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி போடப்படும். காரில் இருந்தவாறே தடுப்பூசி போடும் பணிகள் காரணமாக பொதுமக்களின் நேரம் வெகுவாக மிச்சப்படுத்தப்படுகிறது.

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இருதய நோய் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடுவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அடுத்த மாத இறுதிக்குள் (மார்ச்) அமீரகத்தில் இருக்கும் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கினை மையமாக வைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேற்று இந்த தடுப்பூசி போடும் மையத்தை அபுதாபி சுகாதாரத்துறையின் தலைவர் அப்துல்லா பின் முகம்மது அல் ஹமெத் பார்வையிட்டார். அப்போது, அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.


Advertisement