இந்தியாவில் பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் சாத்தியமிகு ஆபத்து


 


இந்தியாவில் பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் சாத்தியமிகு ஆபத்து உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், கொரோனா பெருந்தொற்றை கையாளும் அரசின் நடவடிக்கைக்கு எதிரான விமர்சனங்கள் என பல விவகாரங்களில் சர்ச்சைக்குரிய இடுகைகளை ட்விட்டர் நிறுவனம் முடக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதுபோன்ற விவகாரத்தில் சில கோரிக்கைகள் ஆளும் கட்சி அல்லது ஆளும் அரசு தரப்பில் இருந்தும் சில கோரிக்கைகள், எதிர்கட்சி, பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் இருந்தும் முன்வைக்கப்படுகின்றன. இதில் சிலவற்றின் மீது ட்விட்டர் நிறுவனம் ஏற்கெனவே கடைப்பிடித்து வரும் அதன் சர்வதேச இடுகைகள் கோட்பாடுகளின்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால், இடுகைகள் மற்றும் பயனர்களின் கணக்குகளை முடக்கும் விஷயத்தில் ட்விட்டர் பக்க சார்புடன் இருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தொடர்பாக அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே கடந்த ஆறு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஆளும் நரேந்திர மோதி அரசுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் டூல்கிட் ஆவணத்தை சமூக ஊடக தளங்களில் சிலர் பகிர்ந்த செயல்பாடு தொடர்பான விசாரணைக்கு அழைக்கும் விவகாரத்தில் டெல்லி மற்றும் ஹரியானாவில் உள்ள ட்விட்டர் நிறுவன அலுவலகங்களில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்குள்ள சில அலுவலர்களையும் காவல்துறையினர் விசாரித்தனர்.

ட்விட்டர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டர் நிறுவன செய்தித்தொடர்பாளர் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். அதில் இந்தியாவில் கருத்துச் சுதந்திரத்தை வெளிப்படுத்த சாத்தியமிகு அச்சுறுத்தல் உள்ளது கவலை தருகிறது என்று அவர் கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பதிலின் முழு விவரம்:

"இந்திய மக்களுக்கு ஆழமான ஈடுபாட்டுடன் ட்விட்டர் சேவை வழங்கி வருகிறது. மக்களின் உரையாடலுக்கும் பெருந்தொற்றின்போது மக்களுக்கான ஆதரவுப்பாலமாகவும் ட்விட்டர் விளங்கி வருகிரது. இந்த சேவை தொடர்ந்து கிடைக்கும் வகையில் இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு பணிந்து நடக்க முயல்வோம். ஆனால், உலக அளவில் இயங்கி வருவதால், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு வெளிப்படையாக செயல்படும் கோட்பாடுகள், ஒவ்வொரு குரலுக்கும் அதிகாரமளித்தல், கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை பாதுகாப்பு ஆகியவற்றின்படியே நாங்கள் வழிநடப்போம்."

டெல்லி காவல்துறை

பட மூலாதாரம்,TWITTER

"தற்போதைக்கு, சமீபத்தில் எங்களுடைய இந்திய ஊழியர்கள் தொடர்பான நிகழ்வுகள், நாங்கள் சேவை வழங்கும் மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் போன்றவற்றால் கவலை கொண்டுள்ளோம். இந்தியாவிலும், உலக அளவிலும் இயங்கி வரும் சிவில் சமூகத்துடன் இணையும் நாங்கள், உலகளாவிய விதிமுறைகளை செயல்படுத்தும்போதும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி செயல்பட முயலும்போதும் போலீஸை பயன்படுத்தி மிரட்டப்படும் உத்திகளால் கவலை கொண்டுள்ளோம்.'

'எனவே, சுதந்திரமான, வெளிப்படையான பொது தளத்தில் உரையாடுவது தொடர்பான விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வர குரல் கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக இந்திய அரசுடன் நாங்கள் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம் தேவை என நாங்கள் நம்புகிறோம். பொது நலன்களை பாதுகாக்க, இந்த விஷயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், தொழிற்துறையினர் மற்றும் சிவில் சமூகத்துக்கு இணைந்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு உள்ளது.' என்று அவர் கூறியுள்ளார்.

ட்விட்டர் வெளிப்படுத்தும் கவலைகள்

ட்விட்டர்

பட மூலாதாரம்,TWITTER

''சமூக ஊடக தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு இடுகைக்காகவும் அதை முழுமையாக கண்காணிப்பது மற்றும் அதற்காக வாடிக்கையாளரின் தகவல்களை ஒரு அமைப்பு பெறும் விஷயத்தில் ஒரு தனி நபரை (விதிகளை செயல்படுத்தும் அதிகாரி) குற்றவாளியாக்குவது தொடர்பாக நாங்கள் கவலை கொள்கிறோம்.''

'இந்த விஷயத்தில் அரசு வகுத்துள்ள முறையான செயலாக்க வழிமுறைகள் குறித்து மக்களின் கருத்தை கேட்க நடவடிக்கை எடுக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை வலியுறுத்துகிறோம். இந்த விதிகளை ட்விட்டர் நிறுவனம் அமல்படுத்த குறைந்தபட்சம் மூன்று மாத அவகாசம் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கெனவே நாங்கள் கடைப்பிடிக்கும் குறைதீர் வழிமுறையுடன் சேர்த்து புதிய விதிகளின்கீழ் பயனர்களின் குறைகளை நாங்கள் பெறுவோம் என உறுதியளிக்கிறோம். '

'குறிப்பிட்ட இடுகையை நாங்கள் கடைப்பிடிக்கும் `அந்தந்த நாடுகளில் இடுகையை பார்க்க முடியாதவாறு நிறுத்தி வைக்கும் கொள்கையின்படி' நிறுத்திவைத்தோம். ஆனால், சமீபத்தில் எங்களிடம் விதிகளுக்கு உடன்படாதமை என குறிப்பிட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடுகை கடந்த பிப்ரவரி மாதம் பதிவானதாக கண்டறிந்துள்ளோம். அந்த வகையில், இந்தியா மற்றும் சர்வதேச சட்டத்தின்படியும் சட்டபூர்வ பேச்சு சுதந்திரத்தின்படியும் அந்த இடுகை பாதுகாக்கப்பட வேண்டியது என்ற நிலைப்பாட்டை நாங்கள் கொண்டுள்ளோம். இது குறித்து இந்திய அரசிடமும் நாங்கள் முறைப்படி எழுத்துபூர்வமாக தெரிவித்து விட்டோம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உட்பட்ட எங்களுடைய கொள்கையின்படி, செய்தி ஊடக பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மீது நாங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.'

'சட்டபூர்வ பேச்சு சுதந்திரத்துக்கு உட்பட்டு அந்த இடுகை இருக்கிறது.எனினும், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69ஏ அந்த இடுகை விவகாரத்தில் மற்றொரு தலையீடு ஏற்பட குறைவான வாய்ப்பையே தருகிறது. எனவே விதிகளுக்கு கீழ்படியாமை நோட்டீஸுக்கு பதில் தரும் வகையில் அந்த இடுகையை நிறுத்தி வைக்க நாங்கள் கட்டாயப்பட்டுள்ளோம். அப்படி செய்யாவிட்டால் அது எங்களுடைய பல ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை ஆபத்தை விளைவிக்கலாம்.'

'பல்வேறு உத்தரவுகள் அடங்கிய அந்த நோட்டீஸ் கடந்த சில மாதங்களாக ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டது. அது தொடர்பாக அமைச்சகத்திடம் தொடர்ந்து நாங்கள் பேசி வருகிறோம். அந்த இடுகை ஏன் தொடர்ந்து எங்களுடைய தளத்தில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் விளக்கி வந்துள்ளோம். ட்விட்டர் வெளிப்படை மையம் மற்றும் லூமென் டேட்டாபேஸ் தளத்தில் வெளிப்படையான வகையில் அந்த வேண்டுகோள்களை நாங்கள் காட்சிப்படுத்தியிருக்கிறோம்.' என்று ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.