'பாகிஸ்தானில் இருந்து 10,000 ஜிகாதிகள் வந்துள்ளனர்'



 பாகிஸ்தான் அரசு தீவிரவாதக் குழுக்களுடனான தொடர்பை இன்னும் துண்டித்துக் கொள்ளவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி புகார் கூறியுள்ளார்.


கடந்த மாதம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டனர் என்று தங்கள் நாட்டின் உளவுத்துறை தெரிவிப்பதாகவும் அஷ்ரஃப் கனி கூறியுள்ளார்.


இவை அனைத்தையும் நேற்று (வெள்ளிக்கிழமை) உஸ்பெகிஸ்தானில் நடந்த மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான இணைப்பு தொடர்பான மாநாட்டில் ஆப்கானிஸ்தான் அதிபர் பேசினார். அவர் பேசிய பொழுது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கனியிடம் இருந்து சில அடி தூரத்திலேயே அமர்ந்திருந்தார்.


ஆப்கானிஸ்தானில் சண்டை நடந்தால் அதனால் அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள்தான், தற்போது ஆஃப்கனில் நடப்பதற்கு எங்களைக் குறை கூறக் கூடாது என்று இம்ரான் கான் அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்வினை ஆற்றியுள்ளார்.


ஆப்கானிஸ்தான் அதிபர் வேறு என்ன பேசினார்?

அமைதிப் பேச்சுவார்த்தையில் தாலிபன்களை தீவிரமாகப் பங்கெடுக்க வைப்பதில் பாகிஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டது என்றும் அஷ்ஃப் கனி குற்றம் சாட்டியுள்ளார்.


தாலிபன்கள் யார்? அவர்கள் பற்றிய அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?

ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் தாலிபன் செல்வாக்கு: பாகிஸ்தான் பதறுவது ஏன்?

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது தளபதிகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறியபோதும் ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றும் முயற்சிகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.


தாலிபன்களை ஆதரிக்கும் அமைப்புகள் தற்போது ஆஃப்கன் மக்கள் மற்றும் அரசுக்குச் சொந்தமான சொத்துகளும் உள்கட்டமைப்பு வசதிகளும் அழிக்கப்படுவதைக் கொண்டாடுகின்றன என்றும் இந்த மாநாட்டில் உரையாற்றிய ஆஃப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்துள்ளார்.



அஷ்ரஃப் கனி பேசி முடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஆஃப்கன் அரசு மற்றும் தலிபன்கள் இடையிலான பிரச்னையில் பாகிஸ்தான் அரசு எதிர்மறையாக செயல்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு தமக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.


தமது உரையின்போது அஷ்ரஃப் கனியைப் பார்த்துக்கொண்டே அவரிடம் நேரடியாகப் பேசினார் இம்ரான் கான்.


"ஆப்கானிஸ்தானில் சண்டை நடைபெற்றால் இதனால் அதிகம் பாதிக்கப்படும் நாடு பாகிஸ்தான்தான். கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் 70 ஆயிரம் பேர் இதனால் காயமடைந்துள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானைப் போல வேறு எந்த நாடும் தாலிபன்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர கடுமையாக முயற்சி செய்யவில்லை என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்."


"அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவதற்கும், அமைதி உடன்படிக்கை மேற்கொள்வதற்கும், ராணுவ நடவடிக்கைகள் தவிர அனைத்து விதமான முயற்சிகளையும் நாங்கள் எடுத்தோம். தற்பொழுது ஆப்கானிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகளுக்காக பாகிஸ்தானை குற்றம்சாட்டுவது நியாயமல்ல," என்றும் இம்ரான் கான் தெரிவித்தார்.


Twitter பதிவை கடந்து செல்ல, 1

During his historic visit to Uzbekistan, Prime Minister @ImranKhanPTI, attended the inaugural session of the International Conference “Central and South Asia: Regional Connectivity; Challenges and opportunities”, today.#PMIKinUzbekistan pic.twitter.com/L7HhUTzjeS


— Prime Minister's Office, Pakistan (@PakPMO) July 16, 2021

Twitter பதிவின் முடிவு, 1

இந்த வாரம் ஆஃப்கன் - பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஸ்பின் போல்டாக் எல்லைச் சாவடியை தாலிபன்கள் கைப்பற்றினர்.


இங்குள்ள தாலிபன் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினால், ஆஃப்கன் விமானப் படையினர் மீது ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ராணுவம் தங்களை மிரட்டியது என்று ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


இந்தக் கூற்றை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம், ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைத் தாங்கள் மதிப்பதாக தெரிவித்திருந்தது.


ஆஃப்கனில் தற்போது மோதல் ஏன்?

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்பு இந்த ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முன்னரே அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன.


பாகிஸ்தானில் 'ஷியா' முஸ்லிமாக வாழ்வதில் உள்ள கஷ்டங்கள் என்ன?

ஆப்கனில் அமெரிக்க படை விலக்கலால் இந்தியாவுக்கு ஏற்படும் அமைதியின்மை

இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது. அதற்கு முன்பு இஸ்லாமியவாத அடிப்படைவாத அமைப்பான தாலிபன் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அமெரிக்கா தலைமையிலான படைகள் வந்தபின் இடைக்கால அரசு நிறுவப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது.


சமீப வாரங்களில் தாலிபன்கள் ஆஃப்கனின் பல பகுதிகளையும் வசப்படுத்தி வருகின்றனர். இரான், தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளுடனான எல்லைகளையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.



அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து ஆஃப்கன் படையினர் தாலிபன்களுடன் தீவிரமான சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.


எல்லைச் சாவடிகளை மட்டுமல்லாமல் நகரங்களை இணைக்கும் முக்கிய சாலைகளையும் கைப்பற்றியுள்ளது தாலிபன். இதனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.


தாலிபன் - ஆப்கானிஸ்தான் அரசு படைகள் ஆகியன அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதலில் ஈடுபட்டுள்ளதால் அங்கு போர் சூழல் நிலவுகிறது.


ஆப்கானிஸ்தானின் 85 சதவிகிதப் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக தாலிபன்கள் அண்மையில் அறிவித்தனர். ஆயினும் அந்தக் கூற்றையும் கள நிலவரத்தையும் சரி பார்க்க இயலாது.


நாட்டில் மொத்தமுள்ள 400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதி தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டதாக சில கணிப்புகள் கூறுகின்றன.


ஆப்கானிஸ்தானில் மூன்று மாத சண்டை நிறுத்தத்துக்கு தாலிபன்கள் முன்வந்துள்ளனர். ஏற்கெனவே சிறை வைக்கப்பட்டிருக்கும் தாலிபன்கள் சுமார் 7,000 பேரை விடுவிக்க வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.


இது "மிகப்பெரிய கோரிக்கை" என ஆப்கானிஸ்தான் அரசின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் நதீர் நதீரி கூறியுள்ளார். இருப்பினும் அரசு தரப்பில் இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.