ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை(24) முதல் சினோபாம் தடுப்பூசிகள்


 



வி.சுகிர்தகுமார் 0777113659 

  ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நாளை(24) முதல் சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார பதில் வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
2500 தடுப்பூசிகள் மாத்திரமே தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இவற்றை சனி ஞாயிறு மற்றும் திங்கள் (24,25,26) ஆகிய மூன்று தினங்களில் மாத்திரம் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தடுப்பூசிகள் ஏற்றப்படுவதற்காக அக்கரைப்பற்று இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மற்றும் கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயம் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய மூன்று நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 12 வாரங்களை கடந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாத்திரம் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் ஏனைய இரு நிலையங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களை முன்னிலைப்படுத்துவதுடன் பின்னராக 60 வயதை கடந்தவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் எனவும் கூறினார்.
60 வயதை கடந்தவர்கள் நாளை(24) நண்பகல் 11 மணிக்கு பின்னராக வருகை தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு முதற்தடவையாக தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு கிடைத்துள்ள 2500 தடுப்பூசிகளை மக்கள் முறையாக பயன்படுத்தி கொள்வதுடன் நேரகாலத்திற்கு வருகை தந்து தடுப்பூசிகளை ஏற்றி கொண்டு சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மாத்திரமே தற்போது பச்சை வலயத்தினுள் உள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் சிலரது பொறுப்பற்ற செயற்பாடுகள் நமது பிரதேசத்தை சிவப்பு வலயத்திற்குள் கொண்டு செல்ல ஏதுவாக அமையலாம் எனவும் எச்சரித்தார்.