நுவரெலியாவில் ஆசிரியர்கள் பாரிய போராட்டத்தில்



 (க.கிஷாந்தன்)

 

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர் ,ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி காலை போராட்டத்தில் குதித்தனர்.

 

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னாள் களம் இறங்கிய போராட்டகாரர்கள் அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா-பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி வருகை தந்தனர்.

 

இதன்போது கல்வி சமூகத்தினர் எதிர் நோக்கும் கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமும் எழுப்பப்பட்டு பேரணியை இவர்கள் நடத்தினர்.

 

இப் பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா,வலப்பனை,கொத்மலை, ஹங்குராங்கெத்த,மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலையங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அதிபர்கள்,ஆசிரியர்கள்  ஒன்றுபட்டு கலந்து கொண்டனர்.

 

1994 ஆம் ஆண்டுக்கு பின்னராக நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரன்பாடு, மற்றும் சம்பள நிலுவை உட்பட  கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவலை சட்டமூலத்தை கிழித்தெறிய வேண்டும் என்ற  கோரிக்கைகளுடன், நாட்டின் தேசிய வருமானத்தில் 06% வீதத்தை ஆசிரியர் சேவைக்கு ஒதுக்க வேண்டும் என பல முக்கிய கோரிக்கைகளையும் இவர்கள் முன்வைத்து இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்