"குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை"


 


வங்க தேசத்தில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை தமது அரசு உறுதிப்படுத்தும் என்று பேசியிருக்கிறார்.

வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலில் துர்கா பூஜையின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்குள்ள இந்து கோயில்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசி வருகிறது, ஆனால் கடந்த புதன்கிழமை ஷேக் ஹசீனா இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துகள் அசாதாரணமாகப் பார்க்கப்படுகின்றன.

வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஷேக் ஹசீனா கூறினார். தமது தாய்நாட்டில் நடந்த சம்பவத்துக்கு எதிர்வினை எதுவும் இந்தியாவில் நடந்தால் அதன் தாக்கம் வங்கதேசத்திலும் கடுமையாக ஏற்படலாம் என்பதை இந்தியா உணர்ந்து செயல்பட வேண்டும் என்று ஷேக் ஹசீனா தாகேஷ்வரி தேசிய ஆலயத்தில் பக்தர்களிடையே பேசும்போது குறிப்பிட்டார்.

இது குறித்து வங்கதேச முன்னாள் வெளியுறவு செயலாளர் தெளஹித் ஹுசைன் பிபிசி வங்கதேச சேவைக்கு அளித்த பேட்டியில், வங்கதேசத்தில் நடந்த வன்முறைால் இந்தியாவில் என்ன நடக்கலாம் என்பதுபற்றி வங்கதேச தலைமை வெளிப்படையாக தமது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறது என்று கூறினார்.