(அஸ்லம் எஸ்.மௌலானா)
கல்முனை பஸ் நிலையத்திற்கு முன்பாக வடிகான் நிர்மாணம் மேற்கொள்ளப்படுவதால், வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, இங்கு சேவையில் ஈடுபடுகின்ற பஸ்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக வேறு இடங்களில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வீதி ஒழுங்குமுறை இன்று புதன்கிழமை (26) தொடக்கம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. போக்குவரத்து பொலிஸார் உரிய இடங்களில் நின்று தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி, நெறிப்படுத்தி வருகின்றனர்.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, இலங்கை போக்குவரத்து சபை (சி.ரி.பி.) மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து பணியக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மாலை, மாநகர சபையில் இடம்பெற்ற அவசர கலந்துரையாடலில் இந்நடவடிக்கையை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் பஸ் நிலையத்திற்கு முன்பாகவோ மாநகர சபை தொடக்கம் பொலிஸ் நிலைய நுழைவாயில் வரையான பகுதியிலோ எந்தவொரு வாகனமும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
இதற்கு மாற்று ஏற்பாடாக, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. பஸ்கள் யாவும் கல்முனை ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக இலங்கை வங்கி சந்தி வரை சென்று சி.ரி.பி. சாலை அமைந்துள்ள ஹிஜ்ரா வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
அவ்வாறே, மட்டக்களப்பு - கல்முனை வீதியில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற தனியார் பஸ்கள் யாவும் ரவுண்டபோர்ட் சந்தி வரை வந்து, பொலிஸ் வீதியூடாக பொலிஸ் நிலையம் வரை சென்று, நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் வீதியில் பொலிஸ் நிலைய ஓரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
கல்முனை - அக்கரைப்பற்று மற்றும் கல்முனை - அம்பாறை வீதிகளில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற சி.ரி.பி. மற்றும் தனியார் பஸ்கள் யாவும் மக்கள் வங்கிக்கு முன்பாக ஆர்.கே.எம். பாடசாலை நோக்கி செல்லும் சந்தியில் இருந்து வீதியோரமாக தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

Post a Comment
Post a Comment