இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்



 


தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இந்தி தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.


அந்த நாளிதழ் செய்தியில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரெண்டன் டெய்லர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் தனது ஓய்வை அறிவித்தார். பிரெண்டன் டெய்லர் வெளியிட்டுள்ள அறிக்கை ஜிம்பாப்வே மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் உலகத்தையும் சற்று அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


இந்திய பயணத்தின்போது இந்திய தொழிலதிபர் ஒருவரால் அவருக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வைதான் அந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது. அதில், "இரண்டு வருடங்களுக்கும் மேலாக நான் ஒரு சுமையைச் சுமந்து வருகிறேன். இது கடந்த சில காலங்களாக மனரீதியாக என்னை கஷ்டப்படுத்தியது. சமீபத்தில்தான் இந்தக் கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அந்த வகையில் இப்போது பொதுமக்களுக்கும் பகிர்ந்துகொள்கிறேன்.


அக்டோபர் 2019 பிற்பகுதியில் இந்திய தொழிலதிபர் ஒருவர் அணுகி, ஜிம்பாப்வேயில் டி20 போட்டிகள் நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிக்க என்னை இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். இந்த விவாதத்துக்காக எனக்கு ரூ.15 லட்சம் வரை தரப்படும் என்றார்.


சர்வதேச போட்டிகளில் 'ஸ்பாட் பிக்சிங்' செய்ய வேண்டும் என்றும், அதற்கு சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று அச்சுறுத்தினார்கள். அந்த ஆறு பேரின் மிரட்டலால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்து வேறுவழியில்லாமல், அவர்கள் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்தேன். எனக்கு 15,000 டாலர்கள் கொடுத்தார்கள். இந்த தொகை ஸ்பாட் பிக்சிங்கிற்கான முன்தொகை என்றும் வேலை முடிந்ததும் கூடுதலாக 20,000 டாலர்கள் தரப்படும் என்றார்கள்.


இந்த தருணங்களில் அந்த தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்கத் தொடங்கினார். ஆனால் நான் கொடுக்கவில்லை. இந்தக் குற்றம் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் நான்கு மாதங்கள் கழித்து புகார் தெரிவித்தேன். நான்கு மாதம் என்பது மிக நீண்ட தாமதம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஐசிசியிடம் புகார் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியற்கு காரணம் என் குடும்பத்தின் பாதுகாப்பும் நலனும்தான். அதில் நம்பிக்கை ஏற்பட்ட பின்னரே ஐசிசியை அணுகினேன்.


தனது தவறை வெளிப்படையாக பிரெண்டன் டெய்லர் ஒப்புக்கொண்டது அவருக்கு பாராட்டுகளை தேடித் தந்துள்ளது. அதேபோல் சர்வதேச வீரர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இவ்வாறு தி இந்தி தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.