ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை



 


இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த 09 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதி செய்துள்ளது.


குறித்த சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகக் கூறி, தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.


வழக்கு விசாரணைகளின் பின்னர், இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.