தீர்த்தோற்சவம்



 


வி.சுகிர்தகுமார்  

  அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஆனிப்பௌர்ணமி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று நடைபெற்றதுடன் பாற்குடபவனியும் 108 சத சங்காபிசேகமும் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.
சிவபூமி என அழைக்கப்படும் ஈழமணித்திருநாட்டின் தென்கிழக்கில் வரலாற்றுச் சிறப்புடன் இயற்கை எழில் நிறைந்த அக்கரைப்பற்று பதிதனில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் கடந்த  இரு வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகோற்சவம் இடம்பெறாத நிலையில் இவ்வருடம் மகோற்சவம் இடம்பெற்றது.
பாற்குடபவனியானது கோளாவில் ஸ்ரீ விக்கேஸ்வரர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஸ்ரீ வம்மிடிப்பிள்ளையாரை அடைந்தது. அங்கு பாலாபிசேகம் இடம்பறெ;றதுடன் சங்காபிசேகமும் நடைபெற்றது.
இதேநேரம் நேற்று காலை பொற்சுண்ணம் இடிக்கும் கிரியைகளோடு தீர்த்தோற்சவ கிரியைகள் ஆரம்பமானது. யாகபூஜைகள் நடைபெற்று தொடர்ந்து ஆலயத்தில் மூலமூர்த்திக்கான பூஜை இடம்பெற்றதுடன் வசந்த மண்டபத்தில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமானுக்கு விசேட அலங்கார பூஜை நடைபெற்றதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட  சப்பரத்தில் அமர்ந்தப்பட்ட விநாயப்பெருமான் பெருந்திரளான பக்தர்கள் புடைசூழ பிரதான வீதிகளினூடாக வங்கக்கடல் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாதஸ்வர மேள ஒலி முழங்க அடியார்களின் பிரார்த்தனையுடன் இடம்பெற்ற கிரியைகளை தொடர்ந்து தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.
கடந்த 02ஆம் திகதி வாஸ்த்து சாந்தி கிரியைகளுடன் ஆரம்பமாகி 03ஆம் திகதி இடம்பெற்ற பிராயசித்த கும்பாபிசேகம் நேற்று 04ஆம் திகதி இடம்பெற்ற கொடியேற்றம் 11ஆம் திகதிவரை இடம்பெற்ற திருவிழாக்கள்  12ஆம் திகதி இடம்பெற்ற பாற்குடபவனி 13ஆம் திகதி இடம்பெற்ற தீர்த்தோற்சவம் கொடியிறக்கத்துடனும் இன்று இடம்பெறும் திருப்பொன்னூஞ்சல்;; பூங்காவனத்திருவிழா, 15ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூசையுடனும்; நிறைவுறும்.

ஆலயத்தலைவர் வி.சுகிர்தகுமார் தலைமையில் இடம்பெற்ற மகோற்சவத்தின் வழிபாட்டுக்கிரியைகள் யாவற்றையும் அக்கரைப்பற்று பகுதி ஆதினகுரு இலி பழனிவேல் குருக்கள் ஆசியுடன் கிரியாகிரம ஜோதி அலங்கார பூசனம் சிவாகமபானு அகோர சிவாச்சாரியார் சிவஸ்ரீP சு.சுதர்சன் குருக்கள் மற்றும் சாதக இளஞ்சுடர் சிவஸ்ரீ சுதன் சர்மா ஆலய குரு ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வருகின்றனர்.
இவ்வருடம் விசேடமாக கல்வித்தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டதுடன் நாளாந்தம் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்தது.