உமா மகேஸ்வரன்! எட்டு வருட அர்ப்பணிப்பானசேவையை நிறைவு செய்து இன்று உயர் பதவிக்காக விடைபெறுகிறார்




 இலங்கையில் இந்து சமய புரட்சிக்கு வித்திட்டவர் உமா மகேஸ்வரன்!

எட்டு வருட அர்ப்பணிப்பானசேவையை நிறைவு செய்து இன்று உயர் பதவிக்காக விடைபெறுகிறார்.

இலங்கையில் இந்து சமய கலாசார  திணைக்களத்தில் பாரியதொரு புரட்சியை ஏற்படுத்தியவர் அதன் பணிப்பாளர் அருளானந்தம் உமா மகேஸ்வரன் .

இன்று (5)ஐந்தாம் தேதி விஜயதசமி அவர் தனது எட்டு வருட கால இந்து சமய அர்ப்பணிப்பான சேவையை நிறைவு செய்து வட மாகாண சபையின் உயர் பதவிக்காக விடைபெறுகிறார்.

 2014 ஆம் ஆண்டு இந்து சமய கலாச்சார திணைக்களத்தில் பிரதிப்பணிப்பாளராக இணைந்து, 2015 பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார் .

அதன் பலனாக கடந்த எட்டு வருட  காலமாக திணைக்களத்தில் பாரிய மாற்றங்களை, புரட்சிகளை செய்து வந்தவர் இன்றைய தினம் அத்திணைக்களத்தை விட்டு விடை பெறுகின்றார்.

 இலங்கையை நிர்வாக சேவையில் அதியுயர் சிறப்பு பிரிவுக்கு கடந்த வாரம் தரம் உயர்த்தப்பட்டிருந்தார். அதன் பலனாக அவர் வடமாகாண சபையின் உயர் பதவிக்காக விடுவிக்கபட்டிருக்கின்றார். 


 அ. உமாமகேஸ்வரன். 

இந்தப் பெயர் காலம் உள்ளளவும் இந்து சமய கலாசார அலுவல்களின் திணைக்களத்தின் வரலாற்றில் என்றும் ஒரு அத்தியாயம். மிகச்சிறந்த திருப்புமுனை கொண்ட அத்தியாயம். அசைக்கமுடியாத ஆளுமையின் அடையாளம்.
வந்தோம் வாழ்ந்தோம் என்பதும் வாழ்க்கைதான். எதைச் சாதித்தோம் என்ற கேள்விக்கு இங்கு பலரிடம் விடை இல்லை. செயல் வீரர்கள் அதிகம் பேசிக்கொள்வதில்லை. ஆனாலும் அவர்கள் கடந்து செல்லும் பாதை ஆழமான அர்த்தம்மிக்க வரலாற்றுத் தடத்தைப் பதித்துச் செல்லும். 

தமிழ் இலக்கிய வரலாற்றில் சோழர் காலம் ஒரு பொற்காலம். இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில் உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள் காலம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதொரு பொற்காலம்.

ஆலயங்களின் வளர்ச்சிக்கு அரசியல்வாதிகளின் அழுத்தங்களையும் தாண்டி அர்ப்பணிப்பான பங்களிப்பு - பிரதேச வாதம் என்ற பேச்சுக்கு இந்த ஆளுமையாளனின் அகராதியில் இடமில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற சங்கத் தமிழனின் வார்த்தையை நெஞ்சத்தில் இருத்தி செயலாற்றிய பெருந்தகையாளன் உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் உருவத்தில் மாறியது. உள்ளடக்கத்தில் மாறியது. செயற்பாட்டில் மாறியது. 

இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பெயரும் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் அளவிற்கு நிர்வாகச் செயற்பாடுகள்  உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள் காலத்தில் உயர்ந்தது என்பதற்குப் பெற்றுக்கொண்ட விருதுகள் சான்று.

இந்து சமய அறநெறிக் கல்வி ஆழமானது. அகலமானது. அழகுறக் கற்றுக்கொண்டால் அற்புதமானது என்பதை எல்லோரையும் உணரச்செய்த செயற்றிட்டம். இளம் இந்துச் சிறார்களின் இதயங்களில் உள்ள தெய்வீகத் தாமரையை மலரவைக்கவல்லது அறநெறிக் கல்வி. இந்தப் பேருண்மை உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள் காலத்தில் நிஜமானது. நாடெங்கும் அதுவே  பேசுபொருளானது. 

ஈழத்திருநாட்டில் எந்த மதத்தவர்களின் அறநெறிப் பாடசாலைகளும் செய்யாத சாதனையை இந்து சமய அறநெறிப் பாடசாலைகளைச் செய்ய வைத்த பெருமை உயர்திரு. உமாமகேஸ்வரன் அவர்களையே சாரும். 

இளம் இந்துச் சிறார்களின் ஆளுமைகளை வெளிக்கொணரும் சாதனையாக அமைந்த - தேசிய ஆக்கத்திறன் விருது - அறநெறிப் பாடசாலைகளின் திறம்பட்ட நிர்வாகங்களுக்கான தேசிய கௌரவம் - அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான தேசிய சேவை மேன்மை விருது ஆகியவை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் சாதனையின் ஒரு மைல்கல்.

இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவகத்தை வடக்கில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் கற்கைகள் நிறுவகமாகவும் - கிழக்கில் சுவாமி விபுலானந்தர் கற்கைகள் நிறுவகமாகவும் - ஏனைய மாகாணங்களுக்காகத் தலைநகரிலே சேர்.பொன். இராமநாதன் கற்கைகள் நிறுவகமாகவும் அமைத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில் நின்று நிலைக்கும் எத்தனையோ பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரும்பணியின் பிதாமகன் உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்தை செழிப்படையச் செய்த பெருமையும் அந்த நிதியம் மூலமாக காலத்தால் அழியாத  பல செயற்பாடுகளை முன்னெடுத்த பெருமை உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்களயே சாரும். அவை வார்த்தைகளால் பட்டியல் இட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு எண்ணிறைந்தவை. அத்தனையும் காத்திரமானவை.
ஸ்ரீலஸ்ரீ  ஆறுமுகநாவலர் மாநாடு, முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் மாநாடு, உலக அரங்கையே ஒன்று கூட்டிய முருகபக்தி மாநாடு   அப்பப்பா இப்படியும் ஒரு மனிதனால் சாதித்துக் காட்ட முடியுமா எனத் திகைக்க வைத்த தருணங்கள் அவை. 
கலைஞர்களுக்கான கௌரவம், ஆராய்ச்சி மாநாடுகள், நாட்டாரியல் வழக்காறுகளுக்கு முக்கியத்துவம் தரும் செயற்பாடுகள், பொங்கல விழா, புத்தாண்டு விழா, நவராத்திரி விழா  அடடா இப்படி எத்தனையோ முத்திரை பதித்த நிகழ்ச்சிகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் செய்தது என்று நாம் அனைவரும் மார்தட்டிச் சொல்லலாம் என்றால் அதற்குக் காரணம் உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள்.
அருள்நெறி விழா, கந்தபுராண எழுச்சி விழா, நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தோடு இணைந்து தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் என அத்தனையும் இந்து சமய அறநெறிப் பாடசாலைகளையும் ஆன்மிகத்தையும் இணைத்து ஒரு கோட்டில் பதிக்க வைத்தவை.இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வரலாற்றில் நின்று நிலைப்பவை.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தொடக்கப்பட்ட காலம் முதல் ஆராய்ச்சி மற்றும் அறநெறி சார்ந்த நூல் வெளியீடுகள் சிறப்புற நிகழ்ந்த வண்ணமே உள்ளன. ஆனாலும் உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்கள் காலத்தில் இத்துறையிலும் புதுமெருகினைக் காணக்கூடியதாக இருந்தது என்பது எவராலும் மறுக்க முடியாத பேருண்மை. 
நல்லூர்க் கந்தப்பெருமானின் காலடிகளில் வைத்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நூல் வெளியிட்டது உலக வரலாற்றில் முதல் நிகழ்வாக அமைந்தது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமான் படைத்த கந்த புராண வசனம் மீள்பதிப்பே அந்த வெளியீடாகவும் அமைந்தது. 
இந்து சமய அறநெறிக் கல்வி சார்ந்த நூல்கள் உலகத் தரம் வாய்ந்தவையாக மாற்றம் பெற்றன. கொரோனா காலம் அத்தனை அரச நிர்வாகச் செயற்பாடுகளையும் முடக்கியபோதும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகப் புதிய பரிணாமம் எடுத்தது. வானொலி ஊடகங்கள் மூலம் இணையத்தளங்கள் முகநூல் வழியாக அந்தவேளையிலும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தைப் பயணிக்க வைத்த பெருமை உயர்திரு உமாமகேஸ்வரன் அவர்களையே சாரும்.
இப்படி இந்த ஆளுமையாளனின் செயற்பாடுகளை நாம் சொல்லிக்கொண்டே போகலாம். யாரையும் திணித்து வேலை வாங்க விரும்பாத மனோபாவம். எடுக்கின்ற சம்பளத்திற்கு கொஞ்சமாவது வேலை செய்யுங்கள் அது போதும் என்பதே கடமை பொறுப்பேற்க வருபவர்களிடம் அவர் கேட்கும் ஒரேயொரு கோரிக்கை. 
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு எவராலும் நிரப்பப்பட முடியாத இடத்தை இந்தப் பதவி உயர்வு ஏற்படுத்திவிட்டது. 
இனி ஒரு பயணம் எமக்கு அந்தப் பெருந்தகையாளனோடு இல்லை என்பதை எண்ணும்போது இதயம் கனக்கிறது. 
வார்த்தைகள் மௌனிக்கின்றன. 
உதடுகள் கண்ணீரோடு புன்னகைக்கின்றன. 
புன்னகை பதவி உயர்வு தந்த பெருமிதம். 
விழியோரம் தழும்பும் கண்ணீர் - கடந்த காலத்து நினைவுகளை மீட்பதன் அடையாளம். 
இப்படியொரு ஆளுமை மிக்க பண்பாளன் காலத்தில் நாமும் பணிபுரிந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்.

விபுலமாமணி கலைச்சுடர் வி.ரி.சகாதேவராஜா
முன்னாள் தலைவர் சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்றம் காரைதீவு.