அக்கரைப்பற்று, பிரிமியர் லீக் 2023




 

வி.சுகிர்தகுமார் 0777113659

  அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரிமியர் லீக் 2023 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வும் கழக சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழாவினை சிறப்பிக்கும் முகமாகவும் இளைஞர்களை இந்து இளைஞர் மன்றத்தினுள் உள்வாங்கி அதன் மூலம் அவர்களை சமூகப்பணிக்குள் அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தின் கீழும் இச்சுற்றுப்போட்டி நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்   ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜயதுங்க வைத்தியர் சித்திரா தேவராஜன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.ஜெகநாதன் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் த.கிரோஜாதரன் அனுசரணையாளர்களான ததீஸ்வரன் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களின் வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைத்தலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
இதன் பின்னராக அதிதிகளினது உரையும் இடம்பெற்றது. இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமான கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதுடன் இளைஞர்களை சமூக பணிக்குள் உள்ளீர்க்கும் இதுபோன்ற பல திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினருக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இதன் பின்னர் இடம்பெற்ற அறிமுக நிகழ்வில் சுற்றுப்போட்டியின் நோக்கம் பற்றி இந்து இளைஞர் மன்ற தலைவராலும் உறுப்பினர்களாலும் தெளிவுபடுத்தப்பட்டன.
தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்கின்ற ஏழு அணிகளின் பெயர்கள் மற்றும் வீரர்கள் நடுவர்கள் வர்ணனையாளர்கள் புள்ளிகணிப்பீட்டாளர்கள் மேற்பார்வையாளர்கள் அனுசரணையாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களுக்கான சீருடைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னராக இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட அதிதிகளினால் போட்டித்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
போட்டித்தொடர்; 15ஆம் 16ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள நிலையில் வெற்றி பெறும் அணிக்கு எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழாவில் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்படும்.