தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி




 56 களில் தீப்பந்தத்துடன் துறை கடந்து கற்பித்த களுதாவளையின் முதல் ஆசிரியை பார்பதி.

இன்று(12) அவரது 31 வது நாள் நினைவு தினம்!

அதையொட்டி இக்கட்டுரை வெளியாகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை கிராமத்தின் முதலாவது ஆசிரியை திருமதி பார்பதி கணபதிப்பிள்ளை ஆவார்.

1956 களில் மின்சாரம் இல்லாத கிராமம் அது. அதிகாலையில் எழுந்து இருள் பிரியும் முன்னர் தீப்பந்தத்துடன் குறுமண்வெளி ஆற்றுத் துறையை  கடந்து படுவான்கரைக்குச் சென்று கற்பித்த ஓர் அர்ப்பணிப்பான ஆசிரியை . கடந்த மாதம் 09 ஆம் திகதி,  தனது 89  வது வயதில்  இறைபதமடைந்தார்.

களுதாவளை கிராமத்தின் கல்வி மற்றும் சமூக பணிகளில் முக்கிய பங்காற்றிய ஆளுமையாக விளங்கிய பார்பதி ஆசிரியையை அந்தப் பகுதி மக்கள் பெருமையுடன் இன்றும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.


களுதாவளை கிராமத்தில் 07.11.1937 இல் பிறந்து வளர்ந்த பார்பதி ஆசிரியை, சிறு வயதிலிருந்தே கல்வி மீது அதிக ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தார். கல்வியை முடித்த பின்னர் ஆசிரியர் பணியில் இணைந்து பல மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றினார். அவருடைய கற்பித்தல் முறையும், மாணவர்களிடம் கொண்ட அன்பும் காரணமாக அவர் பலராலும் மதிக்கப்பட்ட ஆசிரியராக விளங்கினார்.

அவர் கல்விச் சேவையுடன் மட்டுமல்லாமல் சமூக சேவைகளிலும் தன்னை அர்ப்பணித்தவர். கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் நல்ல பண்புகளின் வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைத்தார். பல சமூக, மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் தீவிரமாக பங்கேற்று சமூக ஒற்றுமையை வலுப்படுத்தினார்.

1953ஆம் ஆண்டு களுதாவளை மத்திய கல்லூரியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய அவர், பின்னர் ஆசிரியர் துறையில் பணியாற்றி பல ஆண்டுகள் சேவை செய்தார். தனது வாழ்க்கை முழுவதும் மாணவர்களின் கல்வி முன்னேற்றமே தனது இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டார்.

"தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் பெறப்படும்"  என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க அவரை பெற்றெடுத்த பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் சமுதாயத்தில் உயர்நிலைகளில் இருக்கின்றார்கள்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த கே. கருணாகரன் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளராக இருந்து,  தற்போது களுதாவளை சுயம்பு லிங்கப் பிள்ளையார் ஆலய தலைவரான க. பாஸ்கரன் போன்றோர் அதற்கு சாட்சியமாக உள்ளனர்.
பார்பதி ஆசிரியர் கற்பித்த மாணவர்கள் இன்று பல்வேறு துறைகளில் முன்னேறி சமூகத்தில் சிறந்த இடங்களைப் பெற்றுள்ளனர். இதனை அந்தப் பகுதி மக்கள் அவருடைய கல்விச் சேவையின் பெருமையாகக் கருதுகின்றனர்.

வித்தகர் விபுலமாமணி  வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு  நிருபர்.