நூருல் ஹுதா உமர்
இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் “அகன்று செல்” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களிலிருந்து மக்களை அகற்றி பாதுகாக்கும் நோக்கில் சாய்ந்தமருதில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த நடைபயண செயற்பாடு இந்நிகழ்வின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பணிபுரியும் பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை மையமாகக் கொண்டு, போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், “போதைப்பொருட்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு” என்ற செய்தியை பொதுமக்களிடையே பரப்பும் வகையில் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன.


Post a Comment
Post a Comment