திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியர் ஒருவரும் பெண் ஊழியர் ஒருவரும், நீதிமன்ற வழக்கேடு ஒன்று காணாமற்போன சம்பவம் தொடர்பில் நேற்று (29.05.2026) கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரையும் எதிர்வரும் 1 ந் திகதி வரை விளக்க மறியலில் வைப்பதற்கு திருமலை நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த வழக்கு பிரிவிடல் சம்பந்தப்பட்ட வழக்காகும். இது வழக்கானது, திருமலை நீதிமன்ற மாவட்ட கௌரவ நீதிபதி திருமதி ஜீவராணி கருப்யைா அவர்கள் முன்னிலையில் விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், குறித்த வழக்குத் தொடர்பான வழக்குக் கோவைகள் காணாமல் போயிருந்தன.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில், திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரால் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் போது, காணாமற்போனதாகக் கூறப்படும் வழக்கேடு, கைது செய்யப்பட்ட ஆண் ஊழியரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது சொத்துக்களை களவாடியமை, பொது சொத்துக்களை சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்தமை மற்றும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்
குறித்த வழக்கின் சந்தேக நபர்கள் எதிர்வரும் திங்கட்கிழமையன்று, திருமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


Post a Comment
Post a Comment