திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 50ஆம் ஆண்டு நிறைவு ' பொன்விழா'



 


வி.சுகிர்தகுமார்          

 திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட திராய்க்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 50ஆம் ஆண்டு நிறைவு ' பொன்விழா' 2026.06.01 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது
பாடசாலையின் அதிபர் இராமலிங்கம் தயானந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக  பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸீர் ஏ.எம். நௌபர்டீன் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந. சுதாகரன், கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ். செல்வம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக இலங்கை வங்கி, ஒலுவில் கிளை முகாமையாளர் ரி.பிரபாகர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக உண்டியல்களும் வழங்கினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் இக்கிராமத்தை கட்டிக் காத்து மக்களோடும் பாடசாலையோடும் ஒன்றிணைந்து செயற்பட்ட கிராமத் தலைவர் கிராமத்திற்காக உயிர் நீத்த மயிலாப்போடி அவர்கள் நினைவு கூரப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து திராய்க்கேணிக் கிராமத்தின் முதலாவது ஆசிரியரும் மட்டக்களப்பு வலய முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளருமான அழகையா சுகுமாரனும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி தனது கிராமத்தின் பசுமையான பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்தார்.
இதேநேரம் அதிபர்களாக சேவை ஆற்றிய ஆறு அதிபர்களும் நினைவு கூரப்பட்டதுடன் எஸ். யோகராஜா,   எம். சண்டேஸ்வரன், கே. சுரேந்திரன்,
ஏ.யோககுமார் ஆகிய முன்னாள் அதிபர்கள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
இப்பாடசாலை வரலாற்றில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 163 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவி ஜோகேஸ்வரன் மிதுர்ஷியா பாராட்டப்பட்டதுடன் சாதனை புரிந்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி அவர்களுக்கான பாராட்டுக்களும் இடம்பெற்றன.
பாடசாலையில் பொன்விழாவை நினைவு கூரும் வகையில் மலர் வெளியீடு ஒன்றும் இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை தற்பொழுது தரம் 01 தொடக்கம் 11 வரை தரம் உயர்த்தப்பட்டு மொத்தமாக 64 மாணவர்களைக் கொண்டு காணப்படுகின்றது.
இந்நிகழ்வில் கிராமத்தின் முன்னாள் மற்றும்  தற்போதுள்ள தலைவர்களும், கவிஞர் பாறுக் ( பாலமுனை பாறுக்)  அயல் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டதோடு, திராய்க்கேணி கிராம மக்களும் ஒன்று திரண்டு இந்நிகழ்வை சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.