அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வாரம்



 


பாறுக் ஷிஹான்



• "நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா" தொனிப்பொருளில் சத்தியப்பிரமாணம்
• கணக்காய்வு ஐய வினாக்களற்ற நிறுவனமாக மாற்றுவதே 2026 இன் இலக்கு – பிரதேச செயலாளர் ஏ.சி  அஹமட் அப்கர் உரை
 
'நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா' எனும் தொனிப்பொருளின் கீழ்இ நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் தேசிய நேர்மை வாரத்தை முன்னிட்டு  அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை சத்தியப்பிரமாண நிகழ்வு  திங்கட்கிழமை(27)  பிரதேச செயலாளர் ஏ.சி  அஹமட் அப்கர் தலைமையில்  நடைபெற்றது.

தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசியக் கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து மதங்களின் ஆசிகளுடனும் மத அனுஷ்டானங்களுடனும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, அரச அதிகாரிகளுக்கான நேர்மை சத்தியப்பிரமாண உரை வாசிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக நேர்மை வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

10 அடிப்படை விழுமியங்கள் வலியுறுத்தல்

இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலாளர்  ஏ.சி  அஹமட் அப்கர் தெரிவிக்கையில்...

"நேர்மையான கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா" தேசிய வேலைத்திட்டம் வெற்ற பெற வேண்டுமாயின், ஒவ்வொரு அரச உத்தியோகத்தரும் தங்களது அன்றாட கடமைகளில் உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் விழுமியங்களையும் கடைப்பிடிப்பது இன்றியமையாததாகும்.

அரசு சேவையில் நேர்மையை நிலைநிறுத்த ஒற்றுமை, தன்னம்பிக்கை, பொறுப்புக்கூறல், நம்பிக்கை, சரியான நோக்கு, சிக்கனம், வெளிப்படைத்தன்மை, சமத்துவம், உடன்பாடு மற்றும் தன்னடக்கம் ஆகிய 10 அடிப்படை விழுமியங்களையும் உத்தியோகத்தர்கள் தங்களது சேவையில் முழுமையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்குத் தரமான சேவையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

2026 ஆம் ஆண்டின் முக்கிய இலக்கு

தொடர்ந்து உரையாற்றிய அவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் 2026 ஆம் ஆண்டிற்கான முதன்மை இலக்காக, கணக்காய்வு ஐய வினாக்கள் (Audit Queries) அற்ற, நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் கொண்ட ஒரு முன்மாதிரி அரச நிறுவனமாகத் திகழ்வதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது என்றார். இந்த இலக்கை அடைய அனைத்துப் பிரிவு உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தரவரிசையில் இலங்கை சாதனை முன்னேற்றம்


இலஞ்ச மற்றும் ஊழலற்ற நாடுகளின் சர்வதேச தரவரிசையில், இலங்கை கடந்த ஆண்டு 121-வது இடத்தில் இருந்து தற்போது 107-வது இடத்திற்கு (14 இடங்கள் முன்னேற்றம்) உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதேச செயலாளர், நாட்டின் நல்லாட்சியையும் வெளிப்படைத்தன்மையையும் பிரதிபலிக்கும் இந்த நேர்மறை மாற்றத்தை மேலும் வலுப்படுத்த அரசு உத்தியோகத்தர்கள் தொடர்ந்து நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நியமனக் கடிதம் வழங்கி வைப்பு

நிகழ்வின் ஒரு அங்கமாக, உள்ளக கணக்காய்வுப் பிரிவிற்கான பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட எஸ்.ஜே. தேவானந்த் அவர்களுக்குரிய நியமனக் கடிதத்தை பிரதேச செயலாளர் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸபிர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜௌபர், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.எம். ஷாமில் மௌலானா உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டனர்.