மூதூரில் வீட்டின் மீது மோதிய தனியார் பஸ் - சாரதி காயம்
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 64ஆம் கட்டைப் பகுதியில் இன்று (10) அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், வீடு ஒன்று கடுமையாகச் சேதமடைந்ததுடன் பஸ் சாரதி காயமடைந்துள்ளார்.
கதிர்காமத்திற்குப் பயணிகளை ஏற்றிச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த தனியார் பஸ், திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் அமைந்திருந்த ரபீக் பாஷில் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மீது மோதியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விபத்து இடம்பெற்ற வேளையில் வீட்டில் எவரும் இல்லாததால் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. எனினும், மோதலில் வீட்டின் முன்பகுதி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
காயமடைந்த பஸ் சாரதி மீட்கப்பட்டு மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட தூரப் பயணத்தைத் தொடர்ந்து சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment