( வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி பிரதேச சபையின் 13-வது மாதாந்த அமர்வு இன்று (22) புதன்கிழமை சபா மண்டபத்தில் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் நடைபெற்றபோது "நாவிதன்வெளி
வரவேற்பு நுழைவாயிலில் 'உழவர் சிலை' அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இறைவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உப தவிசாளர் உட்பட சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் ஆரம்பத்தில், நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளராகப் பணியாற்றி மறைந்த ஏ.கே.அப்துல் சமட் அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் குறித்துத் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ரூபசாந்தன், "மறைந்த ஏ.கே.அப்துல் சமட் அவர்கள் இனம், மதம் கடந்து மக்கள் பணியாற்றி அனைவரது அன்பையும் பெற்ற ஒரு சிறந்த தலைவராவார்" எனத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இதுவரை காலமும் பிரதேச சபையின் பதில் செயலாளராகக் கடமையாற்றி வந்த பி.சதீஸ்கரன் நிரந்தரச் செயலாளராக நியமனம் பெற்றமைக்கு தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நாவிதன்வெளி பிரதேசம் விவசாயத்தைச் சார்ந்த பகுதி என்பதால், கல்முனை - நாவிதன்வெளி பிரதான வீதியிலுள்ள வரவேற்பு நுழைவாயிலில் 'உழவர் சிலை' ஒன்று நிறுவப்பட வேண்டும் எனப் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கமலேஸ்வரன் பிரேரணை முன்வைத்தார். இப்பிரேரணை சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வழக்குகளை சம்மாந்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்திற்கு மாற்றுவது தொடர்பாகச் சபையின் அனுமதி கோரப்பட்டது. இருப்பினும், நாவிதன்வெளி பிரதேசம் கல்முனை நகரத்திற்கு அருகில் அமைந்திருப்பதாலும், போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டும், சவளக்கடை மற்றும் மத்திய முகாம் பொலிஸ் நிலைய வழக்குகளைக் கல்முனை நீதிமன்ற நியாயாதிக்கத்திலேயே தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டு, சம்மாந்துறை நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment