மர்ஹூம் SSP அப்துல் மஜீத் நினைவுகள்



 


\(வி.ரி.சகாதேவராஜா)


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீத்தின் ஞாபார்த்தமாக ஏற்பாடு செய்யப்பட்ட கத்தமுல் குர்ஆன் மற்றும்  நினைவுப் பேருரை நிகழ்வு நேற்று முன்தினம் காலை பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் மிகவும் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அதிமேதகு ரவூப் ஹக்கீம்  பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இங்கு,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாஸித், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் றஹ்மத் மன்சூர், பொத்துவில் பிரதேச செயலாளர் அஹமட் நஸீல், ஒய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நவாஸ், உலமாக்கல், சமூக செயற்பாட்டாளர், ஊடகவியலாளர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் புதல்வர்கள், சகோதரர்கள், குடும்பத்தினர்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பமாக, அரபுக் கல்லூரிகளின் மாணவர்கள், உலமாக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீத் அவர்களின் மறுவுலக வாழ்வின் ஈடேற்றத்திற்காக புனித அல்குர்ஆனை முழுமையாக ஓதி (கத்தமுல் குர்ஆன்) தமாம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மௌலவி அப்துல் அஸீஸ் அவர்களினால்  விசேட துஆப் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.

துஆப் பிரார்த்தனையைத் தொடர்ந்து, மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் வாழ்வையும், சமூகப் பணிகளையும் நினைகூரும் விசேட நினைவுப் பேருரைகள் இடம்பெற்றன. 

மேலும், பள்ளிவாசல்களுக்கு அல்குர் ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

உரையாற்றிய அதிதிகள் அனைவரும் மர்ஹூம் மஜீத் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாறு, பொலிஸ் துறையில் அவர் ஆற்றிய நேர்மையான கடமைகள், விளையாட்டுத் துறையில் (குறிப்பாக ரக்பி விளையாட்டில்) அவர் நிலைநாட்டிய சாதனைகள் மற்றும் அவரது சமூகப் பின்னணிகள் குறித்து விரிவாகப் பேசினர்.

குறிப்பாக, SLMC தலைவர் ஹக்கீம் உரையாற்றுகையில்,  மர்ஹூம் மஜீத் அவர்கள் கழக மட்ட ரக்பி போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே எனக்கு அவரைத் தெரியும். 

எனக்கு 13 வயதாக இருக்கும்போது, எனது மாமாவுடன் மைதானத்திற்குச் சென்று அவரது அசாத்தியமான விளையாட்டுத் திறமையை நேரில் பார்த்திருக்கிறேன். அவர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் மிகச்சிறந்த, வேகமான ரக்பி வீரர்களில் ஒருவர்.

பொலிஸ் திணைக்களத்தின் ரக்பி அணியை முன்னிலைற்குக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அவர் வெறும் 'SSP மஜீத்' ஆக மாத்திரமல்ல, இந்த நாட்டின் 'IGP' (பொலிஸ் மா அதிபர்) என்ற மிக உயரிய பதவியை அலங்கரித்திருக்க வேண்டிய அத்தனை தகுதிகளும் ஆளுமைகளும் கொண்டவர். நாட்டின் போக்கு அதற்கு இடம் கொடுக்கவில்லை.

எமது கட்சியின் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் இவரை முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) அமைச்சர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு எமது கட்சிக்கு வருவதைத் தடுத்தனர்.

அன்று பெருந்தலைவர் காலத்தில் கட்சிக்கு வராத மஜீத் அவர்கள், எனது தலைமைத்துவக் காலத்தில் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு மு.கா-வில் இணைந்தமை எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமும் மகிழ்ச்சியுமாகும். 

அதன் பின்னர் எமக்காகப் பொத்துவில் பிரதேச சபையைக் கைப்பற்றித் தந்ததுடன், 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டு வரலாற்று வெற்றியைப் பெற்றுத் தந்தார். நமது சமூகம் இழந்த ஒரு மாபெரும் பன்முக ஆளுமையே மர்ஹூம் மஜீத் ஆவார்."

பொத்துவில் பிராந்தியத்தின் கல்வி, அரசியல் மற்றும் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஒரு தலைவரின் நினைவேந்தல் நிகழ்வு, அவர் பிறந்து வளர்ந்த மண்ணிலேயே, அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொத்துவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் மிக நேர்த்தியாக தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச சபை, வர்த்தக சங்கம், ஜம்இய்யத்துல் உலமா சபை என்பன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறித்து பிரதேச மக்கள் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

நிகழ்வின் நிறைவில், வருகை தந்திருந்த அனைவருக்கும் மதிய போசனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்