பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம்



 நூருல் ஹுதா உமர்


நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலய மாணவர்களுக்கு நிந்தவூர் அமீர் மேர்சா பொது நூலகத்தின் இலவச அங்கத்துவம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (21.08.2026) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு நூலக அங்கத்துவ அடையாள அட்டைகளை வழங்கி வைத்தார்.

இதன்போது உரையாற்றிய தவிசாளர், மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அறிவு விருத்தியிலும் வாசிப்புப் பழக்கம் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.

பாடசாலைப் பாடங்களுடன் மட்டுப்படாமல், பல்வேறு துறைகள் சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் மாணவர்கள் தமது அறிவையும் சிந்தனைத் திறனையும் விருத்தி செய்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பொது நூலகங்களை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வதன் அவசியம் குறித்தும், நூலக வளங்களைப் பயன்படுத்தி அறிவைத் தேடுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இலவச நூலக அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ள மாணவர்கள், அதனை முழுமையாகப் பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை தமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் இமாம் கஸ்ஸாலி வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான றிபாய் மற்றும் நஜீப் சரீப், அமீர் மேர்சா பொது நூலகத்தின் நூலகர் ஏ.சி. அன்வர் சதாத், நூலக உதவியாளர் எம்.ஐ.எம். றபீக், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.