இலங்கையின் 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி இந்தியாவில்
ஹஸ்பர் ஏ ஹலீம் -
இலங்கையைச் சேர்ந்த 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான அறிவுப் பரிமாற்றம் மற்றும் அறிமுகப் பயிற்சி நிகழ்ச்சி 2026 ஆகஸ்ட் 10 முதல் 14 ஆம் திகதி வரை இந்தியாவின் போபாலில் அமைந்துள்ள தேசிய நீதித்துறை அகாடமியில் (NJA) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதல், தலைமைத்துவம் மற்றும் மூலோபாயச் சிந்தனை, நிர்வாகத்தில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல், நீதிமன்றங்களில் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் மாற்றம், நீதிமன்றம் மற்றும் வழக்கு முகாமைத்துவம், விசாரணைக்கு முந்தைய நடைமுறைகள் மற்றும் குற்ற ஒப்புதல் உடன்படிக்கைகள், வர்த்தக நடுவர் முறை, சமரசம் மற்றும் மாற்று வழக்குத் தீர்வு (ADR) முறைகள், இணையக் குற்றங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள், அத்துடன் நீதிபதிகளின் மன அழுத்தம் மற்றும் நலவாழ்வு ஆகிய ஒன்பது முக்கிய தலைப்புகளில் அமர்வுகள் இடம்பெற்றன.
2025 டிசம்பர் மாதம் இதேபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 20 உயர்நீதிமன்ற நீதிபதிகளிடமிருந்து கிடைத்த சாதகமான பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.
2025 ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்கான அரசுமுறைப் பயணத்தின் போது அறிவித்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு கட்டமைப்பின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 சிறப்புத் திறன் மேம்பாட்டு பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையம் (NCGG) மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் 300 இலங்கை அரச சேவை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனர்.
இதன் மூலம், இந்தியாவின் மேம்படுத்தப்பட்ட திறன் வளர்ப்புத் திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் மொத்தம் 1,000 இலங்கையர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
#NewsTime #SrilankaNews #SrilankaJudgers #IndaTraining


Post a Comment
Post a Comment