இந்தோனேசியா,புளோரஸ் பகுதியில் நிலநடுக்கம்



 


இந்தோனேசியாவில் ஏற்பட்ட தொடர் நில அதிர்வுகளைத் தொடர்ந்து, புளோரஸ்  பகுதியில் இன்று (17) அதிகாலை 5.9 ரிச்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இத்தகவலை ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த புதிய நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.


கடந்த 15-ஆம் திகதி அந்நாட்டில் ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்த தொடர் பின்னதிர்வுகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இந்த அதிர்வு ஏற்பட்டுள்ளது.


முந்தைய நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வீடுகளை இழந்த மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் வசித்த 9,200-க்கும் அதிகமான மக்கள் தற்போது அரசு அமைத்துள்ள அவசரகால நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தோனேசிய துறைமுக அதிகாரசபையால் கடல்வழிப் போக்குவரத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


நிலநடுக்கத்தால் மின்தடை ஏற்பட்ட பகுதிகளில், மின் விநியோகத்தை மீண்டும் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.