மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015ஆம் ஆண்டு விபத்துக்குள்ளான வேன் ஒன்றை தீ வைத்து எரித்த நான்கு பேருக்கு, 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 25,000 ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (20) தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, குருநாகலிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த 66 இலட்சம் ரூபா பெறுமதியான வேன், ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, விபத்துக்குள்ளான வேனை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் சித்தாண்டி மற்றும் வந்தாறுமூலை பகுதிகளைச் சேர்ந்த வேலுப்பிள்ளை நந்தகுமார், வேலுப்பிள்ளை சுதர்சன், ஜெகநாதன் ஜெயசுதர்சன் மற்றும் சிவகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட வழக்கு விசாரணைகள் பின்னர் 2016ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டன.
கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி நான்கு பேரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை அறிவிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச சட்டவாதிகளான தர்சிகா திருக்குமரநாதன் மற்றும் சபிசாந் மோகன் ஆகியோர் ஆஜராகினர். இதையடுத்து, சொத்துச் சேதம் விளைவித்து வேனை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக நான்கு பேருக்கும் தலா 3 வருட கடூழிய சிறைத்தண்டனையும், மொத்தமாக ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.


Post a Comment
Post a Comment