பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம் மீது தாக்குதலில் 15 பேர் பலி



பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதி நகரான குவெட்டாவில் போலியோ மருத்துவ முகாம் ஒன்றின் அருகே நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்றில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் தாக்குதல் நடந்த இடம்
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர், தடுப்பூசி போட வந்த ஊழியர்களுக்குப் பாதுகாப்பு தந்து கொண்டிருந்த போலிசார் என்று நகரின் காவல் துறைத் துணை ஆணையர் கூறினார்.
அதிகாலையில் மருத்துவக் குழுக்கள் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது.
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து தரும் ஊழியர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தொடர்ச்சியாகக் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்துள்ளனர்.
போலியோ தடுப்பு மருந்து தருவது என்பது பாகிஸ்தானக் குழந்தைகளை மலடாக்க மேலை நாடுகள் செய்யும் சதி என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
பாகிஸ்தானும் , அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானும்தான் , உலகில் போலியோ பரவலைத் தடுக்காத இரண்டு நாடுகள் ஆகும்.