நல்லாட்ச்சியின் ஓராண்டுப் பூர்த்தி விழா





ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சியின் ஓராண்டு பூர்த்தியை நினைவுகூரும் நாளைய (08) தினம் நாடு முழுவதிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரதான தேசிய விழா நாளை பி.ப. 2.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தல் இடம்பெறும்.
இவ்விழாவின் பிரதான சொற்பொழிவு இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளுள் ஒருவரான மகாத்மா காந்தியின் பேரர் கோபால்கிருஷ்ணா காந்தி அவர்களினால் நிகழ்த்தப்படுவதுடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், விசேட அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
ஒரே நாடு – மாபெரும் பலம்” எனும் நூல் வெளியீடும் இதன்போது இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான அரசுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி நிகழ்த்தப்படும் விசேட மதவழிபாடு நாளை காலை. 7.00 மணிக்கு களுத்துறை விகாரை அருகே ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதுடன், களுத்துறை வரலாற்று சிறப்பு வாய்ந்த போதி மகான் வீற்றிருக்கும் பூமியை களுத்துறை விகாரையின் நம்பிக்கைச் சபையிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
காலம்சென்ற பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் 117வது சிரார்த்த தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுதின விழா நாளை மு.ப. 9.00 மணிக்கு காலி முகத்திடலில் அமையப்பெற்றுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலைக்கு அருகில் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து கோட்டே ஸ்ரீ நாக விகாரைக்கு வருகை தரும் ஜனாதிபதி அவர்கள், காலம்சென்ற வண. மாதுலுவாவே சோபித்த தேரருக்காக மலர் அஞ்சலி செலுத்தவுள்ளார்.
பொதுமக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு நேரடியாக சமர்ப்பிக்க முடியுமான ”ஜனாதிபதியிடம் தெரிவிக்க” மற்றும் ”ஜனாதிபதியின் இதயபூமி” நிகழ்ச்சி என்பவற்றை ஆரம்பித்தல் நாளை மு.ப. 11.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும்.
நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள், நாட்டு மக்களுக்கு சௌகரியமான வாழ்வினை பெற்றுத் தருவதற்கு ஜனாதிபதி அவர்கள் வழங்கும் அறிவுறுத்தல்கள் என்பன உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதுபற்றி கண்டறிவதற்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நிருவப்பட்டுள்ள ”அபிவிருத்தி மதிப்பீட்டுப் பணியகத்தை” இதன்போது ஜனாதிபதி அவர்கள் ஆரம்பித்து வைப்பார்.
மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெறும் தர்மபோதனை நாளை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறும்.
ஜனவரி 09ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதுடன், அன்றைய தினம் பி.ப. 6.30 தொடக்கம் இரவு 8.00 மணி வரை மாபெரும் கலை நிகழ்ச்சி சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள ”ஜனாதிபதி அபிமங்கல வருட புகைப்பட நினைவுகள்” புகைப்படக் கண்காட்சி ஜனவரி 09ஆம் திகதி முழுவதும் கொழும்பு ஆர்கேட் இல் இடம்பெறும்.