(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய உட்பட ஏனைய வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த ஊழியர்களின் சேவைக்கு பங்கம் விளைவித்த தோட்டத் தொழிலாளர்கள் 18 பேருக்கு அட்டன் நீதிமன்றத்தின் நீதவான் பிரசாத் லியனகே ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
02.12.2014 அன்று குறித்த வைத்தியசாலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக வைத்தியசாலையில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கு 17.02.2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.
பொகவந்தலாவ – லொயினோன் தோட்டத்தில் வீடொன்றின் மீது மண் மேடு ஒன்று சரிந்ததில் காயமடைந்த குறித்த பெண்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் அங்கு கடமையில் இருந்த ஊழியர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் குறித்த இரு பெண்களும் உயிரிழந்ததாக குற்றம்சுமத்தி தோட்ட தொழிலாளர்கள் சிலர் குறித்த வைத்தியசாலையில் கலகம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டிருந்தனர்.
மேற்படி வழக்கு விசாரணை 17.02.2016 அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இவர்களுக்கு மூன்று மாத கடுமையான வேலையுடன் கூடிய ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

