நாங்கள் எதற்கும் அஞ்சப் போவதில்லை! நீக்கப்பட்டவர்கள் பகிரங்க சவால்



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள்  கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கட்சித்தலைமைக்கு சவால் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களாக கடமையாற்றிய பிரதேச அரசியல்வாதிகள் பத்துப் பேர் நேற்று தொடக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று கூடிய சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. குறித்த பத்து அரசியல்வாதிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பிரதேச அரசியல்வாதிகள் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கட்சித் தலைமைக்கு சவால் விடுத்துள்ளனர்.
குறித்த ஊடகவிலாளர் சந்திப்பில் வலல்லாவிட பிரதேச சபை முன்னாள் தலைவர் உதேனி அதுகோரள, மகரகமை நகர சபையின் முன்னாள் நகரபிதா காந்தி கொடிகார, பொரலஸ்கமுவை நகர சபையின் முன்னாள் தலைவர் அருண பிரியசாந்த, அத்தனகல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் பிரியந்த புஷ்பகுமார, கம்பஹா பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ரஞ்சித் குணவர்த்தன, மீரிகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சனத் நந்தசிரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் தங்களுக்கு எதிரான கட்சியின் நடவடிக்கை குறித்து பகிரங்கமாக விமர்சித்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்த மஹிந்த ராஜபக்ஸவுக்கு சார்பாக செயற்படுவதன் காரணமாகவே தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன இரவோடிரவாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய உடன்பாட்டை மேற்கொண்டு கட்சியை அழிப்பதற்கு முனைந்ததாகவும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும் தங்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவினால் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தையும் பகிரங்கமாக தீவைத்து எரித்துள்ளனர்.
அத்துடன் மஹிந்தவின் நிலைப்பாடே தங்களின் நிலைப்பாடு என்று வலியுறுத்தியுள்ள இந்தக் குழுவினர், முடிந்தால் உடனடியாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்திக்காட்டுமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளனர்.