கொழும்பு நகரில் பாதாள உலக செயல்பாடுகள் அதிகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு



கொழும்பு நகரில் பாதாள உலக செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
கொழும்பு நகரிலும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் தலைதூக்கியுள்ள பாதாள உலக செயற்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் கூட்டு எதிர்கட்சியினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு நகரில் நடக்கும் நிழலுலக செயல்பாடுகள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக டலஸ் அளஹப்பெரும கூறியிருக்கிறார்.
இது சம்பந்தமாக போலீஸ் மா அதிபரிடமும் போலீஸ் ஆணைக்குழுவிடமும் தாங்கள் எழுத்து முலமாக அறிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும தெரிவித்தார்.
கடந்த 72 மணி நேரத்தில் கொழும்பு நகரில் பாதாள உலகத்துடன் சம்பந்தப் பட்ட மூன்று கொலைகள் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர் கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், இந்த கொலைகள் சம்பந்தமாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று டலஸ் அளஹப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக பொது மக்களும் ளிநாட்டு உல்லாச பயணிகளும் பீதியடைந்துள்ளதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக எமது நாட்டுக்கு வரவுள்ள வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது கொழும்பு நகரம் பாதுகாப்பற்ற ஒரு தலைநகரமாக மாறியுள்ளதாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அளஹப்பெரும நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் பாதாள உலக செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பாதாள உலகத்தை முடக்கும் செயற்பாடுகள் கைவிடப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த பொதுத் தேர்தலின் போது வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பாதாள உலக தலைவர்கள் பலர் நாடு திரும்பி தற்போதைய அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு சேவை புரிந்துவந்திருப்பதாகவும் இதன் காரணமாக பாதாள உலகத்தை முடக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிட்டுள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் டலஸ் அலஹபெரும கூறினார்.
ஆனால், இந்த குற்றச் சாட்டுக்களை நிராகரித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர பாதாள உலகத்தை முடக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இவ்வாறான கொலைகளுடன் சம்பந்தப்பட்ட பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் சம்பந்தப்பட்ட கொலைகளின் மூலம் கொழும்பு நகரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.