சம்பள உயர்வு கோரி தேயிலைத் தொழிலாளர்கள் ஹட்டனில் போராட்டம்



இலங்கையில் தேயிலை மற்றும் ரப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களை கொண்ட கூட்டு ஓப்பந்தம் உடனடியாக புதுப்பிக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஹட்டன் நகரில் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் செய்தனர்.
ஹட்டனில் நடந்த போராட்டத்தில் தேயிலை, ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள்.
ஜே.வி.பியின் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜே.வி.பியின் தலைவர்களில் ஒருவரான லால் காந்தவும் கலந்து கொண்டு இந்த கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்து குரல் எழுப்பினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சம்பள அதிகரிப்பு தொடர்பாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்க தரப்பில் வழங்கப்பட்டிருந்த உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்னும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்தனர்.
1991ம் ஆண்டு தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட நலன்களை கருத்தில்கொண்டு தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்குமிடையில் இரு வருடங்களுக்கொரு தடவை கூட்டு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுகிறது.
அதில் முக்கிய அம்சமாக இரு வருடங்களுக்கொரு தடவை சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவரான கி. செல்வராஜ்.
இறுதியாக, 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி கைச்சாத்தான கூட்டு ஓப்பந்தம் கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகி ஒரு வருடமாகின்ற போதிலும் இதுவரையில் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 687 ரூபா 50 சதம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதனை 1,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்கங்களினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், 1000 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பதிலாக, வேறு ஒரு சம்பள விகிதத்தை முன்வைத்து, தொழில் அமைச்சர் ஜான் சேனவிரட்ன முன்வைத்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
இதேவேளை இலங்கையில் தனியார் துறையினருக்கு மாதச் சம்பளத்தில் 2,500 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அதிகரிப்பு தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும் என ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தொழில் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 2- 3 மாதங்கள் கடந்தவிட்ட போதிலும் இதுவரையில் அது கிடைக்கவில்லை.
இது தொடர்பான பிரேரணையொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.