'ஊதிய உயர்வுப் பிரச்சனை': பொறுமை இழக்கிறோம் என்கிறார் மனோ கணேசன்



இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பிரச்சனையில் தாங்கள் பொறுமையிழந்து விட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணி கூறுகின்றார்.
அரசில் ஒரு பங்காளியாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான மனோ கணேசன், இது தொடர்பில் தாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என தெரிவித்தார்.
லட்சக் கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் வேளையில், தம்மால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.
சம்பள உயர்வு கோரிக்கை விஷயத்தில் தோட்ட நிர்வாகங்களுக்கு ஒரு வருடத்திற்கு மேல் கால அவகாசம் வழங்கியும் பொருத்தமான தீர்வை முன்வைக்க அந்நிர்வாகங்கள் தவறி விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
இடைக்காலத் தீர்வாக தனியார் துறையினரை போன்று தோட்டத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபா 2500 அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை கூட தோட்ட நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்த பின் நிற்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
மலையக பெருந் தோட்டத் தொழிலாளர்ளுக்கு தங்களின் தற்போது நாட் கூலியாக ரூபா 620 வழங்கப்படுகின்றது. இந்த தொகை ரூபா 1000 அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சில தொழிற்சங்கங்களினால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் தாங்கள் நஷ்டத்தை எதிர்கொள்வதாக கூறும் தோட்ட நிர்வாகங்கள் அதற்கு தொடர்ந்து மறுத்தும் வருகின்றன.
எனவே கடுமையான நிலைப்பாடு எடுக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என்கிறார் மனோ கணேசன்.ன்றது.