260 கோடி பேருக்கு ஸிக்கா வைரஸ் பரவும் அபாயம்



உலகம் முழுவதும் 260 கோடி பேருக்கு ஸிக்கா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஸிக்கா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் சுமார் 65 நாடுகளில் ஸிக்கா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 260 கோடி பேருக்கு வேகமாகப் பரவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக மக்கட்தொகை அதிகம் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஸிக்கா அச்சுறுத்தல் அதிகம் உள்ளது. அந்த நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் ஸிக்கா வைரஸ் பாதிப்பைக் கண்டுபிடிக்கவோ, தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியாத சூழ்நிலையில் வசிக்கின்றனர். அதே நேரத்தில், பலவகை வைரஸ் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அந்த நாடுகளின் மக்களுக்கு ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். எனவே, அது ஸிக்கா வைரஸ் பாதிப்பில் இருந்து அவர்களைத் தற்காக்கவும் வாய்ப்புள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.