மஹிந்த அரசு படுகொலை செய்து புதைத்தது. மைத்தி அரசு நீதி கிடைக்க தோண்டியது







ஏழு ஆண்டுகளுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பத்திரிகை ஆசிரியர் , லசாந்த விக்ரமதுங்கவின் உடல் அவரது கல்லறையிலிருந்து மீண்டும் ஒரு புதிய பிரேதப் பரிசோனைக்காக தோண்டியெடுக்கப்பட்டது.
தலைநகர் கொழும்பின் பிரதான இடுகாடான, பொரெல இடுகாட்டில் இன்று பலத்த பாதுகாப்புக்கிடையே, மாஜிஸ்ட்ரேட் ஒருவர் முன்னிலையில் லசாந்த விக்ரமதுங்கவின் உடல் தோண்டியெடுக்கப்பட்டது.
அவரது உடல் மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது. சோதனை முடிவடைந்தவுடன் மீண்டும் அது அடக்கம் செய்யப்படும்.
கொலை செய்யப்பட்ட லசாந்தவின் குடும்ப உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க , ஊடகவியலாளர்கள் யாரும் இந்த நடவடிக்கையின் போது அருகே இருக்க அனுமதிக்கப்படவில்லை என்று அக்குடும்பத்தினரின் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.
லசாந்தவின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்த நடவடிக்கையின் போது , அங்கு இருக்கவில்லை. ஆனால் அவரது ஊடக நண்பர்கள் சிலர் அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்ட சம்பவத்தைப் பார்க்க வந்திருந்தனர்.
மஹிந்த அரசின் கடும் விமர்சகர் லசாந்த
லசாந்த விக்ரமதுங்க `சண்டே லீடர்` என்ற வார பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவர் 2009ம் ஆண்டு ஜனவரியில் , கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வரும் வழியில் , நான்கு ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மஹிந்த அரசின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இருந்த லசாந்த விக்ரமதுங்க , கொல்லப்படுவதற்கு முன் எழுதி, அவர் கொலை செய்யப்பட்ட பின் சண்டே லீடர் இதழில் பிரசுரமான தலையங்கம், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் இரு முறை கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதல்கள் அரசால் உந்தப்பட்டு நடந்ததாகத் தெரிவித்து, தான் இறுதியாகக் கொல்லப்பட்டால், அரசுதான் அந்தக் கொலையை செய்திருக்கும் என்று கூறியிருந்தார்.
அவரது மரணம் குறித்து ஒரு புதிய விசாரணை தொடங்கியுள்ள நிலையில் , இந்த நடவடிக்கை வருகிறது.
அவரது உடலின் மீது புதிய பிரேத பரிசோதனை ஒன்று நடத்தப்படப் போவதாக இந்த மாதம் முன்னதாக அறிவிப்பு வந்ததிலிருந்து கொழும்பில் உள்ள அவரது கல்லறைக்கு ஆயுதந்தாங்கிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கொலை தொடர்பாக ராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் சி்ல மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.
அவரது கொலை தொடர்பாக அவர் உடல் மீது முன்னர் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகள் சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன என்று போலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில், கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அவரது உடலை தோண்டியெடுக்க உத்தரவிட்டது.
முன்பு நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைகளில் ஒன்றில் அவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால் மற்றொரு பிரேத பரிசோதனையில் துப்பாக்கிக் காயங்கள் ஏதும் இருப்பதற்கான தடயமே இல்லை என்று கூறப்பட்டது.
மஹிந்த அரச ஆட்சிக் காலத்தில் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது, நியாயம் கிடைப்பதற்காக.நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மைத்திரி அரசு மீளத் தோண்டியுள்ளது.