கருணாவின் பிணை மனு நிராகரிப்பு



விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு கோரிக்கை நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் அரச வாகனத்தை முறையற்ற ரீதியில் விநாயகமூர்த்தி முரளிதரன் பயன்படுத்தியுள்ளதாக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும் பதிவு செய்யப்பட்ட இரகசிய இலக்கத்துடன் குறித்த வாகனத்தை அவர் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தம்வசமுள்ள வாகனத்தை கையேற்குமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு விநாயகமூர்த்தி முரளிதரன் அறிவித்துள்ளார்.
எனினும் குறித்த வாகனத்தை யாழ்ப்பாணத்திலுள்ள வாகன திருத்துமிடத்தில் அவர் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதனை அடுத்து விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விநாயகமூர்த்தி முரளிதரனை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.