சிவகீர்த்தா உட்பட நான்கு பேர் பிணையில்



மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டு திருமலை வீதியிலுள்ள முன்னாள் மேயர் சிவகீர்த்தாவின் வீட்டுடன் இணைந்த அறையில் விபச்சார விடுதி நடாத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் உள்ளிட்ட நான்கு பேரும் தலா  இருபதாயிரம்  ரூபாய்  ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய்  பெறுமதியான  இரண்டு   சரீரப்பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில்; இன்று (5.12.2016) திங்கட்கிழமை இச்சந்தேக நபர்கள் நான்கு பேரையும்  ஆஜர்படுத்தியபோது நிபந்தனையுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இவர்கள் கையொப்பம் இடவேண்டும்  என நீதவான் உத்தரவிட்டுள்ளதுடன் எதிர்வரும் 05ம் திகதி நீதிமன்றத்தில் மீண்டும்  இவர்கள் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார்.

மட்டு திருமலை வீதியிலுள்ள முன்னாள் மேயர் சிவகீத்தாவின் வீட்டுடன் இணைந்த அறையில் விபச்சார விடுதி நடாத்தப்படுவதாக பொலிசாருக்க கிடைத்த தகவலையடுத்து கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி பொலிஸார் திடீர் சோதனை ஒன்றை மேற் கொண்டனர்.

இதன் போது  மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயர் சிவகீர்த்தா மற்றும் அவரது கணவர் பிரபாகரன் உட்பட 09 பேர்  கைதுசெய்யப்பட்டனர்.

இதையடுத்து மேயரின் கணவர் பிரபாகரன் உட்பட 05 பேர் பொலிஸ் பிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டனர். இந் நிலையில் முன்னாள் மேயர் சிவகீத்தா உள்ளிட்ட நான்கு பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.