பெண்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்க விசேட நீதிமன்றம் தேவை





பெண்கள் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கு விசேட நீதிமன்றங்கள் இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும். 

அதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். 

அப்படி செய்தால் மாத்திரமே பெண்கள் தொடர்பான குற்றங்களையும் வழக்குகளையும் விரைவாக நிவர்த்தி செய்ய முடியும். 

இதன் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் கிளையான மகளிர் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் தினம் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்¸ பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் துறை தலைவருமான அ.அரவிந்தகுமார்¸ தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம்¸ கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ்¸ பிரதி செயலாளரும் சட்டத்தரணியுமான அனுதர்சினி சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதன்போது மலையகத்தின் கடந்த காலங்களில் சமூக அபிவிருத்திகாக சேரவ செய்த பெண்கள் 10 பேர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். 

தொடர்ந்து அங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டுமானால் அவர்களுக்கென தனியான நீதிமன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

அப்படி உருவாக்காமல் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என தெரிவித்தார். 

பெண்கள் தொடர்பான வழக்குகள் அவர்களின் தனிப்பட்ட சுய கௌரவத்தை கருத்தில் கொண்டு தனியான நீதிமன்றங்கள் தேவைப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.