மதுபானசாலைக்கு எதிராக முறைப்பாடு



கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் பணிப்புரைக்கமைய கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாகக் கூறப்படும் மதுபான உற்பத்திச் சாலைக்கு எதிராக வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளரால் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனடிப்டையில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளரால் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த நிறுவனத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்காலத்திலும் எந்த அரசியல் சூழ்நிலையின் கீழும் முன்னெடுக்கப்படாமல் இருக்கும் பொருட்டு நீதிமன்ற தடையுத்தரவை பெறும் நோக்கிலேயே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டுக்கமைய விரைவில் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

கிழக்கு மாகாணத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் மதுபான உற்பத்தி நிறுவனங்களும் இங்கு கால்பதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டியுள்ளார். 

கடந்த செப்டம்பர் மாதம் கிழக்கு மாகாண சபையின் 63 ஆவது அமர்வில் உத்தேச மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது. 

அதன் நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச சபையின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் எதிர்காலத்திலும் எவ்வாறான அரசியல் சூழ்நிலைகளின் கீழும் மதுபான உற்பத்திசாலை கிழக்கில் நிர்மாணிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் விரைவில் அதற்கான தடையுத்தரவொன்றை பெற்றுக் கொள்ளுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்திருந்தார். 

ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருள் பாவனையினால் கிழக்கில் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் சமூக சீர்கேடுகள் தலை தூக்கியுள்ள நிலையில் மது மற்றும் போதையினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் தெரிவித்துள்ளார். 

இதனடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் அழைத்து கிழக்கில் போதைக்கெதிரான மாபெரும் கூட்டத்தை ஏறாவூரில் நடத்தியிருந்ததாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்