இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் கிரிக்கெட் சபை அதிகாரிகளும், கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்தனர். ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவர் சஹாரியார் கான், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், நிறைவேற்று அதிகாரி நிஜாமுதீன் சௌத்ரீ ஆகியோரும், சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட அனைவருடனும் சுமுகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருட காலப்பகுதியில், கிரிக்கெட் விளையாட்டுத்துறை பெற்றுக்கொண்டுள்ள வெற்றிகள் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவும், இங்கு கருத்துத் தெரிவித்தனர். கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் மேம்பாட்டுக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பங்களிப்புகள், இங்கு நன்றியுடன் நினைவுகூரப்பட்டன. வருகைதந்த அனைவருக்கும், ஜனாதிபதியினால் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

