தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், அதிமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
கடந்த நான்கு நாட்களாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார், சுமார் 35 மணி நேரங்களுக்கு மேலாக விசாரணை நடத்தி, அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், சசிகலா மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினருமே அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரின.
கடந்த 12-ஆம் தேதி நடைபெற இருந்த இடைத் தேர்தல், பெருமளவு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறி ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், கடந்த வாரம் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத்தருவதாகவும், அதற்கு தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தினகரனிடம் பல கோடி ரூபாய் அவர் பெற்றிருப்பதாக தகவல் வெளியானது. அவரிடமிருந்து ரூ.1.3 கோடி ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
இதுதொடர்பான விசாரணைக்கு வருமாறு டிடிவி தினகரனுக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்தனர். அதன்பேரில், தினகரன் டெல்லி வந்து விசாரணையை சந்தித்து வந்தார்.
சுகேஷ் சந்திரா, அவரது உதவியாளர் ஜனார்த்தனா, நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தினகரன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment