2025 இல் வளமான நாடு என்ற தொனிப்பொருளில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைப் பிரகடனம் 4ந் திகதி வௌியிடப்பட்டது.
இது தொடர்பிலான மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கையை வளமான நாடாக மாற்றுவதே இந்த பொருளாதார பிரகடனத்தின் நோக்கமாகும்.
பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த பொருளாதார தொலைநோக்குத் திட்டத்தில் அடுத்த மூன்றாண்டு காலத்தில் அபிவிருத்திப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரிவான பொருளாதார மூலோபாயங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் பல்வேறு துறைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், இந்த கொள்கை பிரகடனம் வகுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக புதிய பொருளாதாரத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பப் பயன்பாடு ஊடாக உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மை மிக்க நாடாக இலங்கையை மாற்றுவது அரசாங்கத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.
அரசாங்கத்தின் கீழ் அனைத்து ஊழியர்களும் பங்களிப்புச் செய்யக்கூடிய ஓய்வூதியத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும், சமுர்த்தி திட்டத்தை மேம்படுத்துவதாகவும், சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் புதிய பொருளாதாரக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட பல திட்டங்களும் 2025 இல் வளமான நாடு எனும் இந்த பொருளாதாரக் கொள்கை பிரகடனத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இணக்க அரசாங்கத்தின் இரண்டாண்டு பூர்த்தி மற்றும் நாட்டின் எதிர்காலப் பயணம் தொடர்பில் இதன்போது கருத்து வௌியிடப்பட்டது.
பின்னர் இளையோர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகளுடன் ஜனாதிபதி பகிரங்க கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


Post a Comment
Post a Comment