19வது திருத்தம் பாராளுமன்றத்தை வலுப்படுத்தியது



புதிய அரசியலமைப்பின் ஊடாக, பிளவுபடாத, ஒன்றிணைந்த அரசு, பாராளுமன்றத்தை மெம்மேலும் வலுப்படுத்துவதே தனது எதிர்பார்ப்பு என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு, இன்று இடம்பெற்ற விசேட சபை அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

1947ம் ஆண்டு சோல்பறி ஆணைக்குழுவின் பரிந்துரையினால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின் மூலம் இலங்கையில் பாராளுமன்றம் தோற்றுவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பின் கீழ் இது சிறு மாற்றங்களுக்கு உள்ளானது. 

பின்னர் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பின் படி, அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினால், பாராளுமன்ற முறை சிறு பாதிப்புக்களை எதிர்நோக்கியது. 

இதனையடுத்து, கொண்டுவரப்பட்ட 18வது திருத்தச் சட்டத்தினால் பாராளுமன்ற முறை பாதிக்கப்பட்டது. 

எனினும், 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி தேர்தலின் பின் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, நாம் கொண்டு வந்த 19வது திருத்தச் சட்டம் இந்த புனித பாராளுமன்றத்தை வலுப்படுத்தியது என்றார்.