இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, விசேட அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) நடைபெற்றது.
1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.
1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கட்டடங்கள்
பிரித்தானியக் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது "குடியரசுக் கட்டடம்" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இங்கு இலங்கை அரசாங்க சபை (1931-1947), [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை (1947–1972), தேசிய அரசுப் பேரவை (1972–1977), இலங்கை நாடாளுமன்றம்(1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது.
1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாசா கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாதிறந்து வைத்தார்.



Post a Comment
Post a Comment