புதிய குடியிருப்புகள் வேண்டும்



(க.கிஷாந்தன்)   
மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்ட பொகவந்தலாவ ரொப்கீல் தோட்ட தொழிலாளர்களை தங்க வைத்திருக்கும் இடைதங்கல் முகாமிலிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் கூறியதற்கு எதிராக அத் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடத்தனர்.
ரொப்கீல் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் 01.06.2018 அன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது டயர்கள் எரித்து கோஷங்கள் எழுப்பியவாறு தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
சென்ற வருடம் மார்ச் மாதம் 30ம் திகதி இடம்பெற்ற சீரற்ற காலநிலையினால் வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவு அபாயங்களுக்கு முகங்கொடுத்த இத்தோட்டத்தின் 03 குடியிருப்பாளர்களை சேர்ந்த 15 பேர் அத்தோட்டத்தின் தமிழ் வித்தியாலய ஆசிரியர் விடுதி மற்றும் தோட்ட உத்தியோகத்தர்களின் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலக்கம் 319ஜீ.கெர்க்கஸ்வோல்ட் கிராம சேவகர் பிரிவிற்கு பொறுப்பான இத்தோட்டத்தின் கிராம உத்தியோகத்தரின் ஊடாகவும், அம்பகமுவ பிரதேச செயலாளர் காரியலத்தின் ஊடாகவும் இம் மக்கள் தங்களது குடியிருப்பிலிருந்து அபாய எச்சரிக்கையின் ஊடாக வெளியேற்றபட்டு குறித்த இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மண்சரிவு அபாயம் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம். வெள்ள அனர்த்தம் காரணமாகவே எம்மை குடியிருப்புகளிலிருந்து அரச அதிகாரிகளினால் வெளியேற்றினார்கள். மீண்டும் அபாயத்தை எதிர்கொள்ளும் அதே குடியிருப்புக்கு செல்லும்படி தோட்ட நிர்வாகம் எம்மை வழியறுத்துகின்றது.
மாறாக கடந்த ஒரு வருட காலங்களாகியும் எமக்கு நிரந்தர குடியிருப்புகளை பாதுகாப்பான இடத்தில் அமைத்து கொடுக்காது அபாயம் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அதே இடத்தில் மீண்டும் எங்களை குடியமர்த்த தோட்ட நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை பாதுகாப்பான குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் எனவும் அதுவரை இடைதங்கல் முகாம்களிலிருந்து நாம் வெளியேற போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர். இவ்விடயத்தில் தோட்ட நிர்வாகம் எம்மீது கரிசனை காட்டுமாறு மேலும் இவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.