ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை தடுத்த வைத்து விசாரணைசெய்ய நீதிமன்றம் உத்தரவு



(அக்கரைப்பற்று மேற்கு நிருபர்)

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைதான சந்தேக நபரை 7 நாட்கள் தடுத்த வைத்து விசாரணை செய்ய அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதிவான் இஸ்மாயில் உவைசுர் றகுமான் உத்தரவிட்டார்.
நேற்று முன்தினம் (22) ஞாயிற்றுக்கிழமை மாலை பதில் நீதிவான் முன்னிலையில் அக்கரைப்பற்று பொலிசார் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.\

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
அம்பாறை மாவட்ட பொலிஸ் துர்நடத்தை குற்றத்தடுப்பு பிரிவினர் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் கடந்த சனிக்கிழமை (21) கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது அக்கரைப்பற்று அல் பாத்திமியா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள உள்வீதியில் வைத்து மோட்டார் சைக்கில் சென்று கொண்டிருந்த நபரொருவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 2 கிராம் 480 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் துர்நடத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் மதுசங்க தலைமையிலான குழுவினரே குறித்த நபரை கைது செய்ததுடன் அவர் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிலையும் கைப்பற்றியதன் பின் அக்கரைப்பற்று பொலிசாரிம் ஒப்படைத்தனர்.

ஹெரோயினை தன்வசம் வைத்துக்கொண்டு எடுத்து சென்ற சந்தேக நபரை அக்கரைப்பற்று கல்முனை பிராந்தியத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியையும்,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் அனுமதியையும் பெற்று 1984 அம் ஆண்டின் 13 ஆம் இலக்க நஞ்சு அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தம்) சட்டத்தின் திருத்திய பிரதான சட்டத்தின் 82 (3) ஆம் பிரிவின் கீழ் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தியதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டநபர் அக்கரைப்பற்று 1ஆம் பிரிவை சேர்ந்த 30 வயதுடைய நபராவார் இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.