
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (06) மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது வடமாகாண அமைச்சர்கள் இருவர் குறித்த கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் ஏற்பாட்டில் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் றிஸாட் பதியுதீன், பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வடக்கு அமைச்சர்களான ஜீ. குணசீலன், கந்தையா சிவநேசன் , மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப், பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள் , பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள், மீனவ - விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் மண்டபத்தினுள் வருகை தந்திருந்தனர்.
எனினும் பல தரப்பட்டவர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும், குறித்த இரு அமைச்சர்களுக்கும் ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் குறித்த இரு அமைச்சர்களும் குறித்த கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்துள்ளதாக தெரிய வருகின்றது.
(மன்னார் நிருபர் லெம்பட்)

Post a Comment
Post a Comment