ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசு இணங்கிக் கொண்ட விடயங்களைச் செயற்படுத்துவற்கான சர்வதேச அழுத்தத்தைக் கொடுப்பதற்கு, சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் ஊடாகவே அதனைச் செய்ய முடியும். அமெரிக்கா இல்லாததால் மாற்றுவழி ஊடாகவே செய்ய வேண்டியுள்ளது.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்- நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
“2017ஆம் ஆண்டு இலங்கைக்கு நாங்கள் கால அவகாசம் வழங்கியதாகப் பலரும் ஒப்பாரி வைத்தார்கள். கால அவகாசம் என்ற சொல்லே தவறானது. 2015ஆம் ஆண்டு இலங்கையும் இணை அனுசரணை வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. அதில் பல முக்கிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஒரு நாட்டைக் கட்டுப்படுத்தாது.
சர்வதேச சமூகத்தில் தமது நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஒவ்வொரு நாடுகளும் தீர்மானத்தில் உள்ளவற்றை செய்ய முற்படும். அப்படியான ஒரு பொறிமுறையையே நாங்கள் இலங்கை விடயத்திலும் கையாண்டோம்.2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு முடிவுற்றது. தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை இலங்கை அரசு நிறைவேற்றுவதற்கு, அதன் மீது சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும்.
அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு இலங்கை மீது இருக்க வேண்டும். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு இலங்கையும் இணைஅனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் உடனே செய்து முடிக்கப்பட முடியாதவை. அவற்றில் சிலவற்றை நிறைவேற்றுவதற்கு பத்து ஆண்டுகள் வரையிலும் செல்லலாம்.
அந்தத் தீர்மானத்தில் உள்ள மிக முக்கியமான விடயங்களையாவது இலங்கையை நிறைவேற்றச் செய்வதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம். சர்வதேச அழுத்தம் பிரயோகிக்கப்படுவதற்கு இலங்கை மீது சர்வதேச கண்காணிப்பு இருக்கவேண்டும்.
2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மீதான சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்கு மற்றொரு தீர்மானம் அவசியம். அந்தத் தீர்மானம் சில வேளைகளில் நிறைவேற்ற முடியாமல் போகலாம். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா இல்லை.
அமெரிக்காவுக்கு வாக்களிக்கும் தகுதி இல்லை. இலங்கை அரசையும் இணங்கச் செய்து கொண்டு வருமளவுக்கு சாத்தியம் இருக்குமோ தெரியவில்லை. ஐ.நா. செயலர் மற்றும் ஐ.நா. பொதுச் சபையின் ஊடாக அழுத்தம் கொடுத்து சர்வதேச மேற்பார்வையை நீடிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபை வேண்டாம், சர்வதேச மேற்பார்வை வேண்டாம் என்று சொல்பவர்கள், மாற்று வழி என்பதைச் சொல்வதில்லை. எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால், என்ன செய்யப் போகின்றோம். இருப்பதையும் விட்டு அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்று கேள்வி எழுப்பினார்.


Post a Comment
Post a Comment