இலங்கையில் இன்று காலை 6 இடங்களில் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 31 பேரின் சடலங்கள் தேவாலயத்துக்குள் இன்னமும் உள்ளன. 74 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 7 பேரின் சடலங்கள் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், ஷங்கிரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல் ஆகியவற்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 11 வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியான 27 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, 6 இடங்களிலும் இடம்பெற்ற பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கி 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை, ராகம வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


Post a Comment
Post a Comment