தென் இந்திய விமான சேவை மட்டக்களப்பிற்கும் நீடிக்கப்படும்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் உதவும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன. இந்த பணிகளை கண்டறிவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை அங்கு விஜயம் செய்தார். இதன் போது விமான ஓடு பாதையின் அபிவிருத்தி பணிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.RW10042019 2
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் புதுநகரிலுள்ள விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய உதவி நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரியந்த காரிய பெரம தலைமையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் மாணிக்கம் உதயகுமார், பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள், பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் உரையாற்றுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதில் நாம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளோம். யுத்தத்திற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வலுவான பொருளாதார நிலைமை காணப்பட்டது. இந்த நிலை இன்று சீர் குலைந்துள்ளது.
இந்த பிரதேச மக்கள் புதிய வருமானங்களை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளிற்கு வழிவகுக்க வேண்டியுள்ளது. இதில் முக்கிய அம்சம் சுற்றுலாத்துறை அபிவிருத்தியாகும். குறுகிய காலத்தில் இத் துறையின் மூலம் நாம் வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும். இதனால் சுற்றுலாப்பயணிகளை நாம் இங்கு வரவழைக்க வேண்டும்.
இதற்காக மட்டக்களப்பு விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். தென் இந்தியாவை போன்று கட்டுநாயக்கா, மத்தளை ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் விமானங்கள் இங்கு வரவேண்டும். இதனூடாக சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவார்கள். சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.
பாசிக்குடா, அறுகம்பே மாத்திரமல்லாமல் மட்டக்களப்பின் பொருளாதாரமும் அபிவித்தியடையும். இதற்கான நிகழ்ச்சி நிரல் திட்டங்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாம் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி தென் இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலி விமான நிலையத்திற்கு வரவுள்ளது. இதன் பின்னர் இந்த சேவை மட்டக்களப்பிற்கு நீடிக்கப்படும். எயா இந்தியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள் இந்தியாவில் இருந்து இங்கு வரவுள்ளன.
இலங்கையில் 2 விமான நிறுவனங்கள் இந்த சேவையில் ஈடுபட அனுமதி கோரியுள்ளன. நாம் மேற்கொள்ளும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையின் மூலம் மட்டக்களப்பில் சிறப்பான சேவைகள் அடுத்த வருடத்திற்குள் இடம்பெறும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு விமான நிலையம் 2018 ஆம் ஆண்டில் சிவில் விமான சேவைக்காக திறக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மட்டக்களப்பு விமான நிலையம் மட்டக்களப்பு நகரத்தில் இருந்து 2.4 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் விமான ஓடு பாதை 1,066 மீற்றர் நீளத்தைக் கொண்டதாகவும், இதன் அகலம் 49 மீற்றர்களை கொண்டதாகவும் காணப்படுகின்றன.
விமான நிலைய ஓடு பாதைகள் மற்றும் பயணிகளுக்கான பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், கொழும்பு ரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.