வெங்காயம் ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியா முழுக்க வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வடக்கில் சில பகுதிகளில் கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80 ரூபாயாக இருந்தது. முந்தைய மாதங்களில் இது கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையானது.
இப்போது, இது பெரிய விலை உயர்வாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான வீடுகளுக்கு இது அதிகமான விலையாக உள்ளது. இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டுச் சந்தையில் அதிக வெங்காயம் கிடைக்கும்போது விலை குறைந்துவிடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்களும், விவசாயிகளும் இந்த முடிவை வரவேற்கவில்லை. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் மொத்த விற்பனை வளாகங்களில் அவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்தியாவில் அதிக அளவு வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலமாக மகாராஷ்ரா உள்ளது.
வெங்காயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெங்காயத்தின் விலை குறித்த விவாதங்கள் அதிக தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும், இந்தியாவில் வெங்காயத்தால் சர்ச்சை ஏற்படுவது இது முதல்முறை அல்ல. இனிப்பும் காரமும் கலந்த கலவையான ருசியைத் தரும் இந்த வெங்காயம் இந்தியாவில் அரசியலில் பல சமயங்களில் விவாதப் பொருளாக இருந்துள்ளது.

அரசியல் காய்கறி

கடந்த காலத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன. 1980ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான பிரசாரத்தில் வெங்காயம் முக்கிய பங்கு வகித்தது.
கூட்டணி அரசின் தோல்வியால் வெங்காயத்தின் விலைகள் அதிகமாக உயர்ந்துவிட்டது என்று இந்திரா காந்தி தீவிர பிரசாரம் செய்தார்.
அவர் இரண்டு ஆண்டுகளுக்கு 'குடியரசுத் தலைவர்' ஆட்சியை அமல் செய்தார். நெருக்கடி நிலை பிரகடனம் என்று கூறப்பட்ட அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து 1977ல், எதிர்க்கட்சிகளின் ஜனதா தளம் கூட்டணியிடம் ஆட்சியை இழந்தார். பின்னர் அந்தக் கூட்டணி உடைந்து 1980ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தி வெற்றி பெற்றார்.
1998ல் மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்தபோது டெல்லி யூனியன் பிரதேச தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. வெங்காயத்தின் விலை அதிகமாக உயர்ந்ததுதான் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
அந்த சமயத்தில், பதவியில் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித்திடம் தோல்வியடைந்தார். அடுத்து வந்த ஆண்டுகளிலும் அரசியல் தலைப்புகளில் வெங்காயம் தொடர்ந்து இடம் பெற்றது.
சரத் பவார்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionசரத் பவார்
2006ஆம் ஆண்டில் அப்போது மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்த, மகாராஷ்டிராவின் முன்னணி அரசியல் தலைவராக இருந்த சரத் பவார் மீது விவசாயிகள் கோபம் அடைந்து, நாசிக்கில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மீது வெங்காயங்களை வீசினர்.
2010 ஆம் ஆண்டில் டெல்லியில் பாஜக தலைமையில் பெரிய போராட்டம் நடத்தும் அளவுக்கு வெங்காயத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. வெங்காயம் ஏற்றுமதிக்குத் தடை, இறக்குமதி வரி குறைப்பு போன்ற நடவடிக்கைகளை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எடுத்தார்.
2013ல் வெங்காயத்தின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்ததால், வெங்காயம் ஏற்றி வந்த லாரியைக் கடத்திச் செல்லும் அளவுக்கு கொள்ளையின் திசை மாறியது. வெங்காய லாரியைக் கடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்துவிட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் 2017-18ல் இந்தியாவில் மிகப் பெரிய மொத்தவிலை சந்தை இருக்கும், நாசிக் மாவட்டத்தில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.2 என குறைந்தபட்ச அளவுக்கு சரிந்துவிட்டது.

வெங்காயம் ஏன் அவ்வளவு முக்கியமானது?

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணவில் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தியர்களின் உணவுகள் பலவற்றில் தவிர்க்க முடியாத காய்கறியாக வெங்காயம் உள்ளது.
குறிப்பாக வட மாநிலங்களில் இந்த நிலை உள்ளது. காரத்தை அது குறைக்கச் செய்து, பல்வேறு உணவு வகைகளுக்கு தனித்துவமான ருசியைத் தருகிறது. சில நேரங்களில் உணவுடன் சேர்த்து பச்சையாகவும் வெங்காயத்தை சாப்பிடுகின்றனர்.
இருந்தபோதிலும் இந்தியா முழுவதற்கும் தேவைப்படும் காய்கறியாக வெங்காயம் இல்லை. நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள சில பகுதிகளில் அவ்வளவு பரவலாக வெங்காயம் பயன்படுத்தப் படுவதில்லை. சில மதத்தவர்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை. சிலர் ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வெங்காயம் சாப்பிடுவதில்லை.
வெங்காய உணவுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இருந்தாலும் வெங்காயத்துக்கு முக்கிய இடம் உள்ளது. வெங்காயம் என்பது வெறும் காய்கறி வகையைச் சேர்ந்தது மட்டுமல்ல, மக்களின் கலாசாரத்தில் முக்கியமான அங்கம் வகிப்பதாகவும் உள்ளது என்று உணவு வரலாற்றாளர் டாக்டர் மோஹ்சீனா முகடம் கூறுகிறார்.
"முன்னோர்கள் காலத்தில் இருந்தே இந்தத் துணைக்கண்டத்தில் வெங்காயம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான சாமானியர்களுக்கும், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களுக்கும் உணவுடன் இணைந்த காய்கறியாக அது உள்ளது. மகாராஷ்டிராவில் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படும் பெரும்பாலான திருமணங்களில் வெங்காயம் முக்கிய இடம் பெறுகிறது. மணமகனும், மணமகளும் குடும்பத்தினருடன் சந்திக்கும் அந்த நாளில் மணமகள் கன்டே-போஹே (வெங்காயம் மற்றும் அரிசி மாவில் தயாரித்த உணவு) தயாரித்து வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது."

அப்படியானால் அதை அரசியலாக்குவது எது?

வெங்காயம் மிகவும் அடிப்படையானது மற்றும் மலிவானது என்று கருதப்படுகிறது. அதனால் தான் வெங்காயத்தின் விலை உயர்வு பணவீக்கத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அதனால்தான் அதுகுறித்து நிறைய விவாதங்கள், குறிப்பாக வட இந்தியாவில் நிறைய விவாதங்கள் நடப்பதை நீங்கள் காணலாம்.
மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் அரசியலில், அதிகம் வெங்காயம் சாப்பிடுபவர்களைக் கொண்ட வட மாநிலங்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஆகவே, வெங்காயத்தின் விலை ஏறும் போதெல்லாம், சந்தைகளிலும், டெல்லி அரசியலிலும் உடனடியாக அது பிரதிபலிக்கிறது.
வெங்காயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
``வட இந்தியாவைச் சேர்ந்த நுகர்வோர் உயர் அதிகாரங்களில் உள்ளனர் அல்லது அரசில் செல்வாக்கு கொண்டவர்களாக இருக்கிறார்கள். விலை உயர்வு குறித்து மற்ற மாநிலங்கள் அவ்வளவாக புகார்கள் கூறுவதில்லை. வடக்குப் பகுதிகள் காரணமாகத் தான் அரசுக்கு நெருக்கடி ஏற்படுகிறது'' என்று கொள்கை ஆராய்ச்சியாளரும் செயல்பாட்டாளருமான மிலிந்த் முருக்கர் தெரிவிக்கிறார்.
அதேசமயத்தில், வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்தால் வெங்காயம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளின் வருமானம் நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா,குஜராத் மாநிலங்களில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும்.
நாசிக்கை சேர்ந்த செய்தியாளர் தீப்தி ராவுத் பல ஆண்டுகளாக வெங்காய வர்த்தகம் பற்றி செய்திகள் சேகரித்து வருகிறார். ``குறுகிய காலத்தில் விளையும், குறைந்த தண்ணீர் வசதி உள்ள பகுதிகளில் விளையக் கூடிய, பணப் பயிராக வெங்காயத்தை விவசாயிகள் பார்க்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு ஒரு வகையில் வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் ஏ.டி.எம். இயந்திரம் போல அதைப் பார்க்கிறார்கள். சில நேரங்களில் வெங்காயத்தின் விளைச்சலை நம்பி வீட்டின் பட்ஜெட்கள் திட்டமிடப் படுகின்றன'' என்று அவர் கூறுகிறார்.

இது ஏன் மீண்டும் மீண்டும் நடக்கிறது?

அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடும் வெள்ளம் ஏற்பட்டது. அருகில் உள்ள கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் மழை காரணமாக வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
''அதிகமாகப் பெய்த மழையால் வெங்காயப் பயிர்கள் அழிந்துவிட்டன. ஆனால் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தில் 35 சதவீதம் இதனால் பாதிக்கப்பட்டது. அதாவது வழக்கமான பருவத்தைக் காட்டிலும் 25 சதவீதம் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் தென் பகுதிகளில் இருந்து விளைச்சல் கிடைக்கும் பகுதிகளிலும், வெள்ளம் காரணமாக வரத்து தாமதமாகும் என்று தெரிகிறது,'' என்று தேசிய வேளாண்மை கூட்டுறவு மார்க்கெட்டிங் சம்மேளனத்தின் (நாபெட்) இயக்குநர் நானாசாகிப் பாட்டீல் விவரிக்கிறார்.
  • காய்கறி, கவர்ச்சி, மனிதர்கள்!
சமீபத்திய தசாப்தங்களில் இது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. ''உற்பத்தி அளவில் சிறிய மாறுபாடு ஏற்பட்டாலும் வெங்காயத்தின் விலையில் பெரிய அளவில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. மழை அளவு மாறும்போது, விளைச்சல் அதிகரிக்கும் அல்லது குறையும். உற்பத்தியில் சிறிதளவு குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது,'' என்று மிலிந்த் முருக்கர் கூறுகிறார்.
பருவமழையின் பிந்தைய காலத்தில், திருவிழா காலம் நெருங்கும் போது ஒவ்வோர் ஆண்டும் வெங்காயத்துக்குப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று தீப்தி கூறுகிறார். ''ஆண்டுக்கு மூன்று முறை வெங்காயம் விளைச்சல் கிடைக்கிறது. ஒரு பருவத்தில் நல்ல விலை கிடைத்தால், அடுத்த பருவத்தில் நிறைய விவசாயிகள் சாகுபடி செய்து, விற்பனைக்குக் கொண்டு வருவதால் உற்பத்தி அதிகரிக்கிறது. ஆனால் அதனால் விலை சரிந்து போகிறது. எனவே வெங்காயம் சாகுபடி செய்யும் ஆர்வம் விவசாயிகளிடம் குறைந்துவிடுகிறது. மிகச் சிறிய மாறுபாடு இருந்தாலும் வர்த்தகர்களும், இடைத்தரகர்களும் ஆதாயம் வெறும் வகையிலான கேடு ஏற்படுத்தும் சூழ்நிலையாக இது உள்ளது,'' என்கிறார் அவர்.
வெங்காயம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
இந்தியாவில் ஒரு பருவகாலத்தில் எவ்வளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை, முறைப்படியாக ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லாதது ஒரு பிரச்சினை என்று அவர் குறிப்பிடுகிறார். அதுபோன்ற தகவல்களைத் தொகுத்து முடிக்கும்போது, அடுத்த பருவத்தில் உற்பத்தியாகும் வெங்காயங்கள் சந்தைக்கு வந்துவிடுகினஅறன.
''எவ்வளவு வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது, உண்மையில் தேவை எவ்வளவு இருக்கும், எவ்வளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது நம்பகமான அடிப்படையில் யாருக்கும் தெரியாது,'' என்கிறார் அவர்.
தீர்வு என்ன?
அடிப்படை நிலையில் திட்டமிடல், சேமித்து வைக்க நல்ல வசதிகள், உணவுப் பதப்படுத்தல் வசதிகள் மூலம் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம் என்று தீப்தி கருதுகிறார். வேறு வகை காய்கறிகள் உற்பத்தி செய்து நாடு முழுக்க கிடைக்கும்படி செய்தால், வெங்காயத்துக்கான தேவை குறைந்துவிடும் என்கிறார் அவர்.
''வெங்காயத்தின் விலை அதிகம் உயரும்போது அரசு வேகமாக நடவடிக்கை எடுக்கிறது. குவிண்டால் விலை 200 ரூபாய் என சரியும்போது, அதே வேகத்தில் அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? எங்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரு குவிண்டாலை குறைந்தபட்சம் ரூ.1500க்கு அவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்,'' என்று நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி விகாஸ் டாரேகர் கூறுகிறார்.
ஆனால், 'வெங்காயத்தின் விஷயத்தில்' அரசு ஒருபோதும் தலையிடக் கூடாது என்று முருக்கர் கூறுகிறார்.
''மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் வெங்காயத்தைச் சார்ந்துள்ளனர். இந்த அளவீடு ஆண்டுக்கு 2.5 சதவீதம் என்ற அளவில் மெல்ல அதிகரித்து வருகிறது. அமைப்புசாரா மற்றும் கிராமப்புறங்களில் தேவை குறைந்து வருவதால், பொருளாதார தேக்கத்தை நாம் சந்தித்து வருகிறோம். மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்த வேண்டும் என்பதில் உங்களுக்கு அக்கறை இருக்குமானால், ஏற்றுமதிக்கான போட்டி வாய்ப்பை அவர்களுக்கு மறுக்கக் கூடாது. மென்பொருள் ஏற்றுமதி அல்லது வேறு துறைகளில் இதுபோல தடைகள் இருக்கின்றனவா? உண்மையில் இது பொருத்தமற்றது. இப்போதைய அரசுக்கு பெரிய மெஜாரிட்டி உள்ளது. சில நுகர்வோர்களின் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சக்தி இந்த அரசுக்கு இருக்க வேண்டும்'' என்று அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்: