பாதியாகக் குறைந்தது எப்படி?ரஷ்யாவில் மது அருந்துவது

அதிகமாக மது அருந்தும் நாடாக ரஷ்யா கருதப்பட்டது. மதுவுக்கு பெயர் போன நாடாகவும் ரஷ்யா திகழ்ந்தது. ஆனால், 2003ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை அங்கு மது அருந்தும் பழக்கம் 43% குறைந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அந்நாட்டு அரசு எடுத்த மது கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த உந்துதல்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மதுப் பழக்கம் குறைந்ததற்கு ஏற்ப இந்த காலகட்டத்தில் ரஷ்ய மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
"ரஷ்ய கூட்டமைப்பில் மதுப்பழக்கத்தினால், அதிகம் பேர் உயிரிழப்பதாக, குறிப்பாக வேலைக்கு செல்லும் வயதில் இருக்கக்கூடிய ஆண்கள் அதிகம் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டது" என உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
ரஷ்யாவில் 2003ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை மது அருந்துவதும் அதனால் உயிரிழப்பதும் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருக்கிறது. 2018ல் ரஷ்ய ஆண்களின் சராசரி ஆயுள் 68 ஆகவும், பெண்களின் சராசரி வயது 78 ஆகவும் வரலாற்றில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
டிமிட்ரி மெத்வெதவ் அதிபராக இருந்தபோது மது தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு, மதுவுக்கு கூடுதல் வரி, ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தில் மது விற்பனைக்குத் தடை என்பது உள்ளிட்ட மதுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
மதுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு என்பது ரஷ்யாவில் சமீப காலத்தில் நடந்த மிக அதிரடியான நடவடிக்கை என்கிறார் பிபிசி மாஸ்கோ செய்தியாளர் சாரா ரெயின்ஸ்ஃபோர்ட்.
வோட்காவும், பியரும், கருவாடும் நிரம்பி வழியும் கடைகள் இரவு முழுவதும் திறந்த காலமெல்லாம் போய்விட்டது. கடையிலோ, கொண்டுவந்து தருகிற நிறுவனங்களிலோ இரவு 11 மணி வரையில்தான் இப்போது மது வாங்க முடியும். ஒரு காலத்தில் மது என்றே கருதப்படாத பியருக்கும் இந்தக் கட்டுப்பாடு பொருந்தும் என்கிறார் அவர்.


--- Advertisment ---